உழைக்கும் வர்கத்தை ஒடுக்குவது தான் திமுகவின் திராவிட மாடலா? - நயினார் நாகேந்திரன்..!
Top Tamil News August 21, 2025 06:48 AM

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிவதாக  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.  

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 285-இன் படி, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, கடந்த சில தினங்களாக சென்னை, கடலூர், திருநெல்வேலி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து போராடவிட்டால் அது திமுகவிற்கு எதிரான பெரும் மக்கள் புரட்சியாக உருவெடுக்கும் என்பதை உணர்ந்த திமுக தலைவர்கள் கொஞ்சம் கூட கருணையின்றி அம்மக்களை அடித்து விரட்டுகிறார்கள். வலுக்கட்டாயமாகக் கைது செய்து அவர்களை சிறையில் அடைக்கிறார்கள். போராட்டக்காரர்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்களையும் சிறைக்காவலில் தாக்கித் துன்புறுத்துகிறார்கள். உழைக்கும் வர்க்கத்தினை இவ்வாறு ஒடுக்குவது தான் திமுகவின் சமூகநீதி மாடலா?  


ஒவ்வொரு தேர்தலின் போதும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆயிரம் ஆசை வார்த்தைகளைக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களைத் திட்டமிட்டு இப்படி ஏமாற்றுவதற்கு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கு மனது உறுத்தவில்லையா? தனது ஆட்சியின் இறுதி காலங்களிலாவது தூய்மைப் பணியாளர்களின் துயரங்களைத் துடைத்து அம்மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதை விட்டுவிட்டு, மென்மேலும் அம்மக்களை வதைக்கும் திமுகவின் அகங்காரம் உண்மையிலேயே வெட்கக்கேடு. 

எனவே, திமுகவால் வஞ்சிக்கப்பட்ட தமிழகத் தூய்மைப் பணியாளர்களுக்கு பக்க பலமாக என்றும் களத்தில் பாஜக நிற்கும் என்பதையும், இந்த அராஜக அரசின் மீதான மக்களின் கடுங்கோபத்தையும், ஆற்றாமையையும் அடக்குமுறைகளால் அணைத்துவிட முயன்றால் அது பேராபத்தில் சென்று முடியும் என்பதையும் முதல்வருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.