வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பாரி என்னும் மாமனிதன். சொல்லும் போதும் நினைக்கும் போதுமே கூட மனம் முழுதும் பிரமிப்பு தான். கபிலருக்கு எப்படி பாரி வியப்பிற்குரிய நண்பனாய் இருந்தாரோ, அதேபோல் தான் எனக்கும். அவ்வளவு எளிதில் கடக்க முடியாதவன் தான் கடலைப் போல வேள்பாரியும்.
வேள்பாரி என்னும் நாவலையும், பாரியையும் பாணர்களைப் போலத்தான் நானும் பார்த்தேன். பசியைப் போக்க யாரும் இல்லாத காட்டுப் பகுதியில் கூட பாரி பற்றிய பாடல்கள் பசியை போக்குவதாய் இருந்ததைப் போலத்தான் எனக்கும்.
என் வலி மறக்க பாரி பற்றி பேசினாலே போதும் என இருந்தது. பாணர்களுக்கு மட்டுமல்ல எனக்கும், என் நினைவு,நேரம் மறந்து பேசும் பொருளாய் பாரியே நின்றான். சுண்டாப்பூனையை அது அறியாமலே அழைத்துச் செல்வதைப் போலத்தான் என்னையும் அழைத்துச் சென்றான் புத்தகம் முழுதும் பாரி.
வேள்பாரி முதன் முதலில் என்னை வந்து சேர்ந்தது ஓர் அலாதியான நிகழ்வு. 2016- ல் ஒரு நாள் நூலகத்தில் ஆனந்த விகடனை கையில் எடுத்து புரட்டிய போது நிகழ்ந்த நிகழ்வு அது. அதுவரை எனக்கு சு. வெ - வை தெரியாது. வேள்பாரி என தலைப்பிட்ட கதையைப் படிக்க தொடங்கிய போது கூட அது பாரி என்னும் மாமனிதனை பற்றியது என நான் அறியேன். ஆனால் ஓர் ஆச்சரியம் நான் படித்தது முதல் வாரக்கதை.
அதில் வயல் நண்டின் கண்கள் வேப்பம் பூவைப் போல இருக்கும் என ஓர் உவமை காட்டப்பட்டு இருக்கும். அன்று வியந்து இதில் நான் அறிய தகவல்கள் ஆயிரம் இருக்கும் என தேடத் தொடங்கி, புத்தகம் வெளிவரவில்லை என அறிந்து, இணையத்தில் இயன்றதை படிக்க முயன்று, எனக்கு அருமருந்தாகும் ஒன்றை புத்தகமாய் கையில் ஏந்த வேண்டும் என காத்திருந்து, முதல் பதிப்பு வெளியீட்டின் போது கையில் ஏந்தித்தான் நின்றேன்- என் கொள்ளிக்காட்டு விதையை, தனைமயக்கி இலையை, சோம பானத்தை, இன்று வரை பத்துக்கும் மேற்பட்ட முறை வாசித்துவிட்டேன் பின்னும் தீரா மயக்கத்தில் தான் திளைக்கிறேன்.
கபிலருக்கு மட்டுமல்ல எனக்கும் வேள்பாரியே வானமாய் நிறைந்து விட்டான். புத்தகத்தின் தொடக்கத்திலேயே இயல்புதான் ஒருவரின் அழகு என்பதை இயல்பாய் சொல்லியிருப்பார் ஆசிரியர். ஆதன், நீலன் இருவரில் ஆதன் கபிலரிடம் அவர் இயல்பை காட்டவில்லை. ஆனால் நீலன் அப்படி இல்லை. அதனால் தானோ என்னவோ ஆதனை விட நீலன் கபிலருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தினான். இயல்புதான் அழகு.
பனையைப் போலத்தான் பறம்பில் எல்லாம் அதனதன் இயல்பில். வளைந்து கொடுத்து வாழ வேண்டிய தேவையில்லை. நீலன், மயிலா தொடங்கி அலவன் வரை அங்கு எல்லாம் அவரவர் இயல்பு.
மனம் தளரும் போது அங்கவையின் சொல் காதில் கேட்கிறது “வீரமும் வலிமையும் சிந்தனையில் தான் உள்ளது” என்று.எங்கேனும் பேச தயங்க நிற்கும் போது “தன்னியல்பில் வெளிவரப் போகும் உண்மையைப் பற்றி முன் கூட்டியே சிந்திக்க என்ன இருக்கிறது” என காதோடு பாடமெடுக்கிறார் கபிலர். பிறர் என்ன நினைப்பார்கள் என நான் செய்ய துணியும் ஒவ்வொரு செயலின் பின்னும் “உன் வேகத்தையும் தாக்குதலையும் நீ தீர்மானி.அவன் தீர்மானித்த ஒன்றை நோக்கி நகராதே” என ஊன்றிய ஈட்டியுடன் என் கண் பார்க்கிறார் தேக்கன். தேக்கனின் சொல்லை பணிந்து கேட்கத்தான் பெரும்பாடு படுகின்றேன்.
என்னை பெரிதும் பாதித்த காட்சி:
இரவாதன் மரணம் படித்த பின் புத்தகத்தை மூடியவள் இரண்டு நாட்கள் புத்தகத்தை திறக்கவே இல்லை.
பாரியின் உயிர் காக்க சிந்தப்பட்ட பொற்சுவையின் ரத்தம்.
அறம் காக்க உயிர்த்துறந்த திசைவேழர்.
"தேக்கன் எல்லோருக்கும் சாமி மாதிரி, சாமியோட இறப்ப சாதாரண மனிதர்களால் ஏற்க முடியுமா?" இன்று வரை ஏற்கத்தான் முடியவில்லை பகரி வேட்டையாடிய பறம்பு ஆசானின் மரணத்தை.
ஒவ்வொருவர் மரணமும் உலுக்கியது தான் என்றாலும்,
அத்தனையும் மீறி பாரியின் கைகளில் இரவாதனை ஒப்படைத்து விட்டு, அப்படியே அவன் கால் பற்றி கதறினான் தேக்கன் "காட்டின் தலைமகனை இழந்தோமடா பாரி". கைகள் இரவாதனை ஏந்தி நிற்க, கால்களை தேக்கன் பற்றி நிற்க, கண்ணீரும் குருதியும் மேலெல்லாம் கொட்டியபடியே பாறையென நின்றான் வேள்பாரி. பாரி மட்டும் அல்ல இதை படிக்கும் போது நானும் பாறையென தான் நின்றுவிட்டேன்.
மனதுக்கு மிகவும் பிடித்த காதல் காட்சியாய் பாரி - ஆதினி காதல் நின்று விட்டது. இதற்கு முன் பேசாத பெண்ணின் மனநிலையைக்கூட அறிந்து, "என்னை விட்டு அகல்வதன் காரணம் என்ன?"என எப்படி கேட்க முடிந்தது பாரியால்.
வேள்பாரியில் அறம், காதல் வீரம், நம்பிக்கை மட்டும் பேசப்படவில்லை. சிறிய, சிறிய நுணுக்கமான உறவுகளான தந்தை - மகள், தாய்- மகள், ஆசான்- மாணவன் என அத்துணையும் அழகாக காட்டப்பட்டுள்ளது. காலம் காலமாக பெண்கள் மட்டுமே பாதுகாத்து வைக்கும் பெண்களுக்கென தனிப்பட்ட வாழ்வு என நினைவுகள் நீள்கிறது வேள்பாரியில்.
இதோ இதை எழுதும் போதும் மனம் வணங்குகிறது வேள்பாரியை, அவன் காத்த அறத்தை. "அறங்காக்கும் தெய்வங்கள் எம்மை ஆளட்டும்,என் மக்களை ஆளட்டும்."
நன்றி.
கோகிலவாணி