கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் கொட்டுவாலி பகுதியை சேர்ந்தவர் ஆஷா. இவர், அதே பகுதியில் வசிக்கும் பிந்து - பிரதீப் குமார் தம்பதியிடமிருந்து அதிக வட்டிக்கு ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால், ஆஷாவிடம் பிந்து - பிரதீப் குமார் தம்பதி கந்துவட்டி முறையில் ரூ. 10 லட்சம் கடனுக்கு ரூ. 20 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்தத் தம்பதியினர் கடன் முழுமையாக அடைக்கப்படவில்லை இன்னும் கடன் உள்ளது என்று கூறி ஆஷாவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஆஷாவை இருவரும் சேர்ந்து நேற்று இரவு மிரட்டியுள்ளனர்.
இதனால், மன உளைச்சல் அடைந்த ஆஷா நேற்று இரவு கொட்டுவாலி பகுதியில் பாய்ந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.