Mansoor Alikhan: தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார். வில்லனாக மட்டுமில்லாமல் நகைச்சுவை கலவையுடனான அவரின் நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது.
முத்து படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்தார். திரைப்படத்தை தாண்டி அவர் நேர்மையான எளிமையான மனிதராகவும் அறியப்படுகிறார். சமூக பிரச்சினைகள் குறித்து அடிக்கடி குரல் எழுப்பியும் வருகிறார். அதே நேரம் அரசியலிலும் அவரின் ஆர்வம் அளப்பறியாதது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பேட்டிகள் என அவரின் பேச்சு வித்தியாசமானதாகவே இருக்கும்.
கிளாசிக் வில்லன் என்பதையும் தாண்டி வித்தியாசமான நடிப்பு, நகைச்சுவை என தனக்கென தனி முத்திரை பதித்தவர். இந்த நிலையில் மன்சூர் அலிகான் பற்றி பிரபல இயக்குனர் ஆர். கே. செல்வமணி சில சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருக்கிறார். கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்தவர் செல்வமணி என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்தின் வில்லனே மன்சூர் அலிகான் தான்.
மன்சூர் அலிகானை வாடா போடா என்று பேசும் அளவுக்கு செல்வமணிக்கு உரிமை இருக்கிறது. மன்சூர் அலிகானை பொறுத்தவரைக்கும் உண்மையிலேயே நல்ல நடிகர், அற்புதமான மனிதர் என்று செல்வமணி கூறியிருக்கிறார். அவரை பற்றி நடிகைகள் சில சமயங்களில் புகார் கொடுத்ததும் உண்டு. ஏனெனில் காமுகனாக நடிக்க சொன்னால் காமுகனாகவே மாறிவிடுவார். அது தவறு தான்.
ஆனால் நடிப்பில் நல்ல முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்படியே மாறிவிடுவார். அப்படி நடிக்கும் போது நடிகைகளுடன் அவருக்கு பிரச்சினை வந்திருக்கிறது. நானும் சொல்லி புரிய வைத்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் மிகச்சிறந்த மனிதர் என மன்சூர் அலிகானை பற்றி செல்வமணி கூறியிருக்கிறார்.