Rajini Kamal : பல வருடங்களுக்குப் பின் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கப் போகிறார்கள்.. அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்கிற செய்திதான் கடந்த இரண்டு நாட்களாக ஓடி வருகிறது. சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்படும் விவகாரமாகவும் இது மாறி இருக்கிறது.
அதற்குக் காரணம் ரஜினியும் கமலும் திரையில் ஒன்றாக நடித்து 46 வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களில் அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.. எனவேதான் இந்த செய்தி ரசிகர்களிடம் பரபரப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கமலை வைத்து விக்ரம், ரஜினியை வைத்து கூலி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் லோகேஷ். அதோடு தனது படங்களில் மல்டி ஸ்டார்களை நடிக்க வைத்து தன்னால் பெரிய நடிகர்களை ஒன்றாக திரையில் நடிக்க வைக்க முடியும் என நிரூபித்தும் காட்டியிருக்கிறார்/ அவரின் விக்ரம், மாஸ்டர் ஆகிய படங்களை பார்த்தால் இது புரியும்.
எனவேதான் லோகேஷ் கனகராஜ் மீது கமலுக்கும் ரஜினிக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது. அதுவும் கூலி படம் வெளியாகி 5நாட்களில் இப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்ய தற்போது இது டேக்ஆப் ஆகி இருக்கிறது. கூலி படத்திற்கு பின் கார்த்தியை வைத்து கைதி2 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் லோகேஷ். ஆனால் ரஜினி கமல் நடிக்கும் படம் படத்தை துவங்க இருப்பதால் கைதி2 தள்ளிப்போகும் என்கிறார்கள்.
லோகேஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. ஒருபக்கம் ரஜினி கமல் படத்திற்கான கதையை உருவாக்கும் வேலையிலும் லோகேஷ் ஈடுபடவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 பாதியில் துவங்கும் என்கிறார்கள்.
இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனத்தின் புதிய சி.இ.ஓவாக உதயநிதியின் மகன் இன்பநிதியை நியமிக்க போகிறார்களாம். அந்த அறிவிப்போடு கமல் ரஜினி இணையும் படத்தின் அறிவிப்பையும் வெளியிடுவார்கள் என சொல்லப்படுகிறது.