மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நாளையுடன் (21-ம் தேதி) கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதில் முக்கியமாக பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதாவின் படி, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால், 31-வது நாள் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவர்.
இதற்கு முன்பு வரை முதல்வர் அல்லது அமைச்சர்களுக்கு நீதிமன்றங்கள் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தால் மட்டுமே அவர்கள் பதவியை இழப்பார்கள்.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ``நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில் ஆளும் அரசை சட்டவிரோதமாக அகற்றும் சதி அரங்கேற்றப்படுகிறது.
இந்த மசோதா கொடூரமானது, அரசியலமைப்புக்கு விரோதமானது. நாட்டை சர்வாதிகாரத்துக்கு மாற்றும் முயற்சி நடக்கிறது.
எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடுதன் மூலமும், சட்டமன்ற பெரும்பான்மையை சாப்பிடுவதன் மூலமும், கூட்டாட்சியைப் பயன்படுத்தி அவர்களை மிரட்டி முகாம்களில் தங்க வைப்பதன் மூலமும் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கான திட்டம் இது.
ஏற்கெனவே கூட்டணி ஆட்சியில் இருக்கும் அரசுகளை உறுதியற்றதாக மாற்றும் சூழ்ச்சி அரசியலை செய்துவரும் பா.ஜ.க இப்போது அதை சட்டப்பூர்வமானதாக மாற்ற முயற்சிக்கிறது" என வாதிட்டனர்.
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, ``இந்த மசோதா முற்றிலும் கொடூரமான விஷயமாக நான் பார்க்கிறேன். 'ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை' என்று சொல்லி மக்களின் கண்களில் மண்ணைத் தூவப் பார்க்கிறார்கள்.
நாளை அவர்களின் கட்டளைக்கு அடிபணியாத முதலமைச்சருக்கு எதிராக எந்த வழக்கையும் பதிவு செய்யலாம். அவரை 30 நாட்களுக்கு தண்டனை இல்லாமல் கைது செய்யலாம்.
அதன் மூலம் அவரை மிரட்டி பணியவைக்கவோ, அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றவோ முயற்சிக்கலாம். இது முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது," என்றார்.
காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி, ``எதிர்க்கட்சிகளை சீர்குலைப்பதற்கான சூழலை உருவாக்குகிறார்கள். எதிர்க்கட்சி முதல்வர்களைக் கைது செய்ய மத்திய அமைப்புகளை கட்டவிழ்த்துவிடுவார்கள்.
அவர்களை தேர்தல் முறையில் தோற்கடிக்க முடியாவிட்டாலும், தன்னிச்சையான கைதுகள் மூலம் அவர்களை பதவி நீக்கம் செய்வார்கள். அதே நேரம் எந்த ஆளும் கட்சி முதலமைச்சரும் ஒருபோதும் இப்படி கைது செய்யப்படமாட்டார்." என்றார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி சுதாகர் சிங், ``இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது... இந்தியா பாகிஸ்தான் - வங்கதேசமாக மாறும் விளிம்பில் உள்ளது. அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் இருக்கிறார்கள் அல்லது வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அந்த சூழலை உருவாக்க முயற்சிக்கப் படுகிறது." என்றார்.
மதுபானக் கலால் கொள்கை மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கில் இதை கவனிக்கலாம்.
டெல்லி தேர்தல்களில் பா.ஜ.கவை வீழ்த்தி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மீது நிரூபணமில்லா குற்றச்சாட்டுகளை சுமத்தி ஐந்து மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகுதான் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதற்குப் பிறகு பா.ஜ.க அவரை ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தி, ராஜினாமாவும் செய்ய வைக்கப்பட்டார்.
ஒருவேளை இந்த மசோதா அப்போது அமலில் இருந்திருந்தால், மார்ச் 21, 2024 அன்று அவர் கைது செய்யப்பட்ட 31 வது நாளில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்.
ஆளும் தி.மு.க-வின் செந்தில் பாலாஜி பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டிலும் இதேபோன்ற பிரச்னை வெடித்தது. முதலமைச்சர் ஸ்டாலினும் ஆரம்பத்தில் அவரை ஒரு இலாகா இல்லாத அமைச்சராகத் வைத்துக் கொண்டார்.
அதையும் இல்லாமலாக்க வேண்டுமெனக் கூறிய ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சண்டையால், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைகளும் நடந்தது. இறுதியில் அவரும் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடதக்கது.
'நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தரவேண்டியது அவசியம் இல்லை'- உச்ச நீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk