காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Dinamaalai August 21, 2025 01:48 AM

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 3வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இந்த நீர்வரத்து மதியம் 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மாலை 4 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியானது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல், சத்திரம், ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் அருவிக்கு செல்லும் நுழைவுவாயிலை பூட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த்துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக -தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,45,000 கன அடியிலிருந்து 1,05,000 கன அடியாக குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 3வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.