சாலையில் ஆபத்தான முறையில் கிடக்கும் மின்சார கேபிள்கள் பற்றி புகைப்படத்துடன் புகாரளித்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், புகைப்படத்திலுள்ள வாகனங்களை மட்டும் Al உதவியுடன் அகற்றிவிட்டு, பிரச்சனை சரி செய்யப்பட்டதாக பெருநகர சென்னை மாநகராட்சி பதிவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
உயிரையே பறிக்கவல்ல மின்சார கேபிள்களைப் பற்றிய தகவல் அறிந்ததும் அதனை அகற்றுவதைவிட்டு புகைப்படங்களை எடிட் செய்வதில் மட்டும் அக்கறை காட்டியிருப்பது மக்கள் நலனில் திமுக அரசு கொண்டுள்ள அலட்சியப்போக்கையே சுட்டிக் காட்டுகிறது.
மக்களை ஏமாற்றி உயிருடன் விளையாடுவது தான் திராவிட மாடலா? இந்த முறை AI தொழில்நுட்பம் தவறு செய்ததால் மட்டுமே திமுக அரசின் தவறு வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இதுவரை எத்தனை புகார்கள் களையப்பட்டது போல புனையப்பட்டன? எத்தனை தவறுகள் மறைக்கப்பட்டன? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழுகின்றன.
ஒருபுறம் பணிகளைத் துறந்து விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் முதல்வர் ஸ்டாலின், மறுபுறம் புகாரைச் சரிசெய்வதை விடுத்து, புகைப்படங்களை மட்டும் மாற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம். இது தான் நாடு போற்றும் நல்லாட்சியா? எளியோரை எள்ளிநகையாடி, AI உதவியுடன் ஏமாற்றி, மீண்டுமொரு முறை கோட்டையில் கொடியை ஏற்றலாம் என்ற எண்ணத்துடன் உழன்று வரும் திமுக அரசு அரசு, பகல் கனவு களைந்து ஏமாற்றமடைந்து, தமிழகத்தில் இருந்து தூக்கியெறியப்படும் நாள் வெகு தொலைவிலில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.