அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜேபி மோர்கன் அசெட் மேனேஜ்மென்ட்டின் அலெக்ஸ் ட்ரெவ்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் சந்தை நிலவரங்கள் குறித்தும், இந்த இரண்டு நாடுகளில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.
இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி ஒரு சாதகமான அம்சம். எனினும், மனிதர்களை போன்ற ரோபோக்கள் போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் தாக்கம் இந்த நன்மையை குறைக்குமா என்பது குறித்து விவாதம் உள்ளது. ஆனால், உடனடி எதிர்காலத்தில், இந்த தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காது, மாறாக, அவர்களின் பணிகளை எளிதாக்க உதவும் என்று அலெக்ஸ் ட்ரெவ்ஸ் குறிப்பிடுகிறார்.
மேலும் இந்திய நிறுவனங்களின் நிர்வாக திறன்கள் மிகவும் வலிமையாக உள்ளன. ஆனால், இந்தியாவில் முதலீடு செய்பவர்கள் மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்:
1. இந்தியாவில் திட்டங்களை செயல்படுத்துவது எப்போதும் எளிதானது அல்ல.
2. தற்போது இந்தியச் சந்தை “மிகவும் விலை உயர்ந்ததாக” தெரிகிறது.
3. இந்திய நிறுவனங்களின் தரம் மற்றும் அவற்றின் நிர்வாக திறன்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.
அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள வரிகள் கவலைக்குரியதாக இருந்தாலும், மற்ற நாடுகளை போல இந்தியா ஏற்றுமதியை அதிகம் சார்ந்து இல்லை என்பதால், அதன் தாக்கம் குறைவு என்று அலெக்ஸ் கூறுகிறார்.
இந்தியாவை போலவே ஜப்பான் சந்தை சாதனை அளவில் உயர்ந்திருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:
1. நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகள் மேம்பட்டு வருகின்றன. இது அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணியாகக் கருதப்படுகிறது.
2. நீண்ட காலமாக பணப்புழக்கம் அதிகம் நிலவிய ஜப்பானில், தற்போது தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதால் நுகர்வோர் செலவினங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் சந்தை நல்ல மதிப்பைக் கொண்டிருப்பதாகவும், அங்கு நிறுவனங்களை வாங்குதல் மற்றும் இணைக்கும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அலெக்ஸ் ட்ரெவ்ஸ் கூறுகிறார். இது, சந்தையில் அதிக லாபத்தை ஈட்டுவதற்கான ஒரு ஆரோக்கியமான போக்கை குறிப்பதாக அவர் கருதுகிறார்.
மொத்தத்தில் மற்ற நாடுகளில் முதலீடு செய்வதை விட இந்தியா, ஜப்பான், நாடுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மற்றும் லாபகரமானது என்பதே அலெக்ஸ் அவர்களின் கருத்தாக உள்ளது.
Author: Bala Siva