மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் 36 கோடி ரூபாய் பாக்கியை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபாவுக்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு
சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு நீதிபதிகிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, சட்டப்படி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏழு நாட்களில் வருமான வரியை செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. அதனால், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்திய குமார் வாதிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதி, வருமான வரி நோட்டீசின் அடிப்படையில் வசூல் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.