மதுரையில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
Top Tamil News August 21, 2025 01:48 PM

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் அக்கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் இன்று நடக்கிறது.

இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதம் உள்ள பணிகளை ஏற்பாட்டு குழுவினர் இரவு, பகலாக செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மாநாட்டுக்கு வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான பணிகளும் முழுவீச்சில் நடக்கின்றன. மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டையொட்டி, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டு, வாகன பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

த.வெ.க. மாநாட்டு திடலின் ஒரு பகுதியில் பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் போன்ற தலைவர்களுடன் விஜய் நிற்பது, வாழ்த்து பெறுவது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மாநாட்டு மேடை உச்சியில் செய்யப்பட்டுள்ள அலங்கார ஏற்பாடுகளில், அண்ணா, எம்.ஜி.ஆர். படங்களுடன் விஜய் இருப்பது போன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, விஜய் வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்றும் எழுதப்பட்டுள்ளன.

தி.மு.க. ஆட்சியை பிடித்த ஆண்டான 1967, அ.தி.மு.க. ஆட்சியை பிடித்த ஆண்டான 1977 ஆகியவற்றையும் குறிப்பிடும் வகையிலும், 2026-ல் விஜய் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதற்காக அந்த ஆண்டையும் மேடையின் உச்சியில் பொறித்து உள்ளோம் என த,வெ,க, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த மாநாடானது, இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை நடக்க இருக்கிறது. மேலும், 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றுகிறார். தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், கலை நிகழ்ச்சிகள், உறுதி மொழி ஏற்பு, கொள்கை விளக்க பாடல், தீர்மானம் நிறைவேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து விஜய் பேசுகிறார்.

தொண்டர்கள் பெரும் அளவில் பங்கேற்பார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தவெக மாநாட்டை ஒட்டி எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை- தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த முடிவை தனியார் பள்ளிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.