TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முதலே விஜய் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் வரத் துவங்கிவிட்டனர். குறிப்பாக இன்று காலை 6 மணியிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்களும் தொண்டர்களும் பல வாகனங்களில் மதுரையை நோக்கி செல்ல துவங்கி விட்டனர். விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் 8 லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர். இந்த முறை எத்தனை பேர் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது பின்னரே தெரியவரும். மாநாட்டுக்காக வருபவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள்.
விஜய் கொடி ஏற்றுவதற்காக 100 அடி உயரத்தில் நடப்பட்ட கொடிக்கம்பம் நேற்று கீழே விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. நல்ல வேளையாக உயிர் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஒரு கார் மட்டும் பலத்தை சேதம் அடைந்தது. அவருக்கு புதிய கார் வாங்கி கொடுக்கப்படும் என தவெக சார்பில் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அவரின் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்திலும் ஏற்பட்டிருக்கிறது. கட்சி துவங்கியது முதலே விஜய் ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார். அவ்வப்போது பாஜகவையும் கொஞ்சம் தொட்டு செல்வார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசியதும் இல்லை.. விமர்சனம் செய்ததும் இல்லை. அதே நேரம் அதிமுக கூட்டணியிலும் தவெக இடம் பெறவில்லை. தனித்துப் போட்டியிடும் என அவர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். இந்த நிலையில்தான் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை தவெக சந்திக்கவுள்ளது.
இந்த மாநாட்டில் விஜய் 30 லிருந்து 40 நிமிடங்கள் வரை பேசுவார் என சொல்லப்படுகிறது, மேலும் விஜயும், ஆதவர் அர்ஜுனா ஆகிய இருவர் மட்டுமே மாநாட்டில் பேசுவார்கள் என சொல்லப்படுகிறது. 2026 தேர்தலை சந்திக்க என்ன வியூகம்.. தேர்தல் திட்டங்கள் ஆகியவற்றை பற்றி இந்த மாநாட்டில் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் அவர் தமிழகமெங்கும் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அதுபற்றியும் அவர் பேசுவார் என கணிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டிலும் அவர் ஆளும் கட்சியான திமுகவை மட்டுமே குறி வைத்து பேசுவார் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். மாநாட்டில் தொண்டர்கள் அமர்வதற்காக இருக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான்கு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டார்கள். அதில் நான்கு பேர் கடைசி நேரத்தில் இருக்கைகளை தர முடியாது என சொல்லி விட்டார்கள்.
அதேபோல் மாநாட்டிற்கு ஒரு நாட்களுக்கு முன்பே வந்து மதுரையில் தங்க திட்டமிட்டிருந்த விஜயின் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் லாட்ஜ்களில் ரூம்கள் கொடுக்கப்படவில்லை. இதற்கு பின்னணியில் அரசியலே இருக்கிறது என தவெக ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் பொங்கி வருகிறார்கள். எனவே இதுபற்றியும் கூட விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.