விஜய்யின் தவெக மாநாடு நேற்று நடந்த நிலையில் விஜய்யின் அரசியல், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பழ கருப்பையா கூறியதாவது:
விஜய்யின் கட்சி, அவரை முதல்வா் வேட்பாளா் என்று அறிவித்திருக்கிறது. இதில் எந்தப் பிழையும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முடிந்த எதுவும் விஜய்யால் முடியாது என்று யாரும் கூற மாட்டார்கள். எனவே, அத்தகைய விருப்பம் விஜய்க்கு இயல்பானதே. ஆனால், விஜய் வெற்றி பெற இயலுமா என்பதே இப்போது அனைவரின் மனதிலும் உள்ள கேள்வி. விஜய்யின் கட்சி இதுவரை எந்தத் தேர்தலையும் சந்திக்காத ஒரு புதிய கட்சி.
தன் அரசியல் வலிமை, தன் கூட்டங்களில் திரள்கிற மக்கள் தொகையில் இருக்கிறது என்று விஜய் நினைத்தால், அது பிழையாக போய்விடும். மாற்றுக் கட்சியினர் பெரும் பணத்தையும் அதிகாரத்தையும் கொண்டவர்கள். எனவே, அவர்கள் வேறு நடிகர்களை வைத்து கூட்டம் கூட்டி, விஜய்யின் கூட்டத்தை வீரியமற்றதாக மாற்றிவிடுவார்கள். இரண்டும் வெறும் கூட்டம்தான் எனும் நிலைக்குக் கொண்டு போய்விடுவார்கள். தனக்கு கூடும் கூட்டத்தை கொண்டு விஜய் இப்போது என்ன செய்கிறார் என்பதுதான் அவரை அரசியலில் நிலைநிறுத்தும்.
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையம், 28 கிராமங்களை அழித்துவிட்டு வரக்கூடாது என்பது ஒரு சரியான அரசியல் நிலைப்பாடு. ஆளும் கட்சியின் உள்நோக்கம், அதைச் சுற்றி அடிமாட்டு விலைக்கு வாங்கி வைத்திருக்கிற சொத்துகளை ஒன்றுக்குப் பத்தாக விற்பதுதான். ஆனால், பரந்தூர் விமான நிலையம் குறித்து நான்கைந்து முறை பேசினால் மட்டும் போதாது. ‘நஞ்சை நில மீட்பு இயக்கம்’ தொடங்கிப் பரந்தூரை மீட்டெடுத்தால், அங்கு வளரும் ஒவ்வொரு நெல் தாளும் விஜய்யை வணங்கும். இந்த அரசிடமிருந்து மக்களை மீட்கப் போதுமானவர் என்னும் எண்ணம் மக்களிடையே வளரும். அது விஜய்யின் கட்சியை வலுப்படுத்தும். அதன் மூலம், திரைப்பட பிம்பம் நீங்கிய ஒரு அரசியல் பிம்பம் உருவாகும். அதுவே, விஜய் அரசியலில் நிலைபெறவும், சாதிக்கவும் உதவும்.
அப்படி இல்லாமல், வெறும் கூட்டத்தால் விஜய் முதல்வராகிவிடலாம் என்றால், தமிழகத்தின் அரசியல் களம் மாறிவிட்டது என்று பொருள். அப்படிப் பார்த்தால், விஜய்க்கு அடுத்த தமிழ்நாட்டின் முதல்வராக நயன்தாராதான் இருப்பார் என்று அடித்துச் சொல்லலாம். அவருக்கும் ஒரு புஸ்ஸி ஆனந்த் கிடைக்க மாட்டாரா என்ன?
எதிர்க்கட்சியாக இருந்து என்ன செய்கிறோம் என்பதுதான், ஒரு கட்சி ஆளுங்கட்சியாக வழி வகுக்கும். விஜய்யின் கட்சி இதுவரை எந்தத் தேர்தலையும் சந்திக்காத கட்சி. தமிழ்நாட்டில் மாறி மாறி ஆளும் அந்த இரு கட்சிகளுக்கும் வாக்களிப்பதில்லை என்றொரு கூட்டம், மூன்றாவது அணியாகச் சிறிது அறிமுகத்துடன் நிற்கும் ஒரு கட்சிக்கு வாக்களிப்பது வழக்கம். இதை நம்பி மூன்றாவது அணியாகப் பல கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க முயன்ற விஜயகாந்தின் கட்சி, நடுக்கடலில் மூழ்கிவிட்டது. அதே இடத்தில், அதே மாதிரியான அரசியலைக் கையில் எடுத்துக்கொண்டு விஜய் இப்போது நிற்கிறார். ‘சேர வாரீர்’ என்று அவர் அழைத்தும், இதுவரை யாரும் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. ‘எல்லாருக்கும் அமைச்சர் பதவி தருகிறேன் வா’ என்று அல்வா ஆசை காட்டியும் யாரும் வரவில்லை. இதுவே, விஜய்யின் கட்சி குறித்த மதிப்பீடு என்ன என்பதை அறிவதற்குப் போதுமானது.
இத்தகைய சிதறுண்ட முயற்சிகள், திமுகவுக்கு வலி இல்லாமல் அரியணை ஏறத்தான் பயன்படும். இன்னொரு முறை விஜய் தனித்து நின்று திமுகவின் வெற்றிக்கு வழிவகுப்பது, விஜய்யை கோடம்பாக்கத்தை நோக்கித் திருப்பத்தான் வழிவகுக்கும்.
பாஜக அல்லாத அணி எனும் விஜய்யின் கொள்கை முடிவு நேரியதே. ஒரு தேர்தலில் விஜய், அதிமுக கூட்டணியில் ஓர் உட்கட்சியாக இருக்க வேண்டும். அதன் தலைமைக்கு ஏற்கெனவே நாடாண்ட அதிமுகவை ஏற்க வேண்டும். சமய சார்பற்ற கூட்டணியாக அது உருவாவதால், திமுக அணி பிளவுற்று, சில பாஜக எதிர்ப்பு கட்சிகளும் இந்தக் கூட்டணிக்கு வரும். இதனால், சிறுபான்மை வாக்குகள் இடம் மாறி, திமுகவின் வீழ்ச்சி விரைவுபடும்.
இது ஏன் நடக்காது? அதிமுகவின் தம்பிதுரை வக்ஃப் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், பாஜக அரசுக்கு எதிராகவும் தானே வாக்களித்தார்? எனவே, பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை முன்வைத்து எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் பேச வேண்டும். பொது அறிவும், நடைமுறை அறிவும் மிக அதிகம் உடையவர் எடப்பாடி பழனிசாமி. தன்னுடைய ஆட்சியில் பாதியைக் ‘கரோனா’வோடு கழித்தும், சொல்லத்தக்க அளவுக்கு நாடாண்டவர் அவர். குதிரைகள் கிடைக்காத நிலையில், கழுதையில் ஏறுவது யாருக்கும் இயல்புதானே. எல்லோருக்கும் ராவண வதம்தான் முக்கியம்.
இவ்வாறு பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.
Edited by Siva