நாளை நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா... குவியும் பக்தர்கள்!
Dinamaalai August 22, 2025 02:48 PM

நாளை ஆகஸ்ட் 23ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 1-ம் தேதி காலையில் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் வைத்து சுவாமி, கருவூர் சித்தருக்கு காட்சி தந்து சாப விமோசனம் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மூலத்திருவிழா நடைபெற்று வருகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாப விமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும்.

கீரனூரில் அந்தணர் குலத்தில் சூரியன் அருளால் பிறந்தவர் கருவூர் சித்தர். கலைகள் முழுவதும் நன்றாக கற்று, தம்மையறிந்து, தலைவனை தம்முள்ளே கண்ட பெருமை உடையவர். மெய்ஞானியான அவர், சிவஸ்தலங்களுக்கு சென்று நல்வரம் கேட்டு பெற்று நெல்லைக்கு வந்து சேர்ந்தார்.

நெல்லையப்பரை தரிசிக்க வந்த நேரம், அவரிடம் இருந்து மறுமொழி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த கருவூர் சித்தர் "ஈசன் இங்கு இல்லை, அதனால் இங்கு எருக்கு எழ" என்று சாபமிட்டுவிட்டு, மானூரை சென்றடைந்தார். இதையடுத்து நெல்லையப்பர் ரிஷப ராகனத்தில் ஏறி ஆவணி மூல நாளில் மானூருக்கு வந்து சித்தருக்கு காட்சி கொடுத்து சாப விமோசன் பெற்றார் என்பது வரலாறு ஆகும்.

அதன்படி ஆண்டு தோறும் ஆவணி மூலத்திருநாள் அன்று நெல்லையப்பர், பரிவார மூர்த்திகளுடன் மானூருக்கு எழுந்தருளி, கருவூர் சித்தருக்கு காட்சி அளிக்கும் விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு திருவிழா நாளை 23.8.2025 காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 11 நாட்கள் விழா நடைபெறுகிறது. 4-வது திருநாளான 26-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சூரு வாகனத்திலும், சுப்பிரமணியர் மரமயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் 4 ரதவீதிகளிலும் வீதி உலா செல்கிறார்கள்.

31-ந்தேதி கருவூர் சித்தர் மானூரில் எழுந்தருளுகிறார். ஆவணி மூலத்திருவிழா 10-வது நாளான செப்டம்பர் 1-ந்தேதி திங்கட்கிழமை இரவு கோவிலில் இருந்து சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கு, சப்பரங்களில் புறப்பட்டு, மானூருக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றடைகின்றனர்.

காலை 7 மணிக்கு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் வைத்து சுவாமி, கருவூர் சித்தருக்கு காட்சி தந்து சாப விமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரலாற்று புகழ் மிக்க ஆவணி மூலம் மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.