விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கட்டுப்பாடுகள் விதித்த போலீஸ்.. என்னென்ன?
TV9 Tamil News August 22, 2025 02:48 PM

சென்னை, ஆகஸ்ட் 22 :  விநாயகர்சதுர்த்தி கொண்டாட்டத்தை (Ganesh Chaturthi Celebrations) முன்னிட்டு,  சென்னை  காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.  அதன்படியே விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.  நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டு விநாயகர் சுதர்த்தி ஆகஸ்ட் 27ஆம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்றைய நாளில் இருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.

இதனையொட்டி, 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதியான நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தும் அமைப்புகளுடன் சென்னை காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.  கூடுதல் ஆணையர்கள் என். கண்ணன், பிரவேஷ் குமார் மற்றும் ஜி. கார்த்திக்யன் ஆகியோர் தலைமையில் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிலை வைக்க முறையான அனுமதி, பாதுகாப்பை உறுதி செய்வது, அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Also Read : மும்பையில் விநாயகரச் சதுர்த்தி கொண்டாட்டம்…ரூ.474 கோடிக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு

விநயாகர் சுதுர்த்தி கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்

அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தெருக்களிலும், பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களிலும் சிலைகளை வைப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் நில உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். தீயணைப்புத் துறை மற்றும் டாங்கெட்கோவின் தடையில்லா சான்றிதழ்களையும் பெற வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட் காவல் நிலையங்களிலும் சமர்ப்பிக்க வேண்டும். சிலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் அல்லது பள்ளிகளுக்கு அருகில் சிலைகளை வைத்து வழிபட கூடாது. வகுப்புவாத ஒற்றுமையை சீர்குலைக்கும் வாசகங்கள் இருக்கக் கூடாது. ஒவ்வொரு விநாயகர் சிலைக்கு அருகிலும் பாதுகாப்பிற்காக இரண்டு தன்னார்வலர்கள் நிறுத்தப்பட வேண்டும்.

Also Read : விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. சிலைகள் கரைக்க புதிய விதிமுறைகள்..

அந்த இடங்களில் அரசியல் அல்லது மதம் சார்ந்த பதாகைகள் வைக்கக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட நாட்கள், இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. . விநாயகர் சிலையை அமைதியான முறையில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் கரைக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. காவல்துறை விதிகளை மீறுபவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.