ஆன்லைன் விளையாட்டுகள் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, பணம் கட்டுவதும், பணம் சம்பாதிப்பதுமாக மாறிய பிறகு, மாணவர்கள் முதல் முதியோர் வரை அதற்கு அடிமையாக மாறுபவர்களின் எண்ணிக்கை பல கோடி. விளையாடுபவர்களின் பணம் கோடி கோடியாக ஒருபக்கம் பறிக்கப்பட, உயிர்களும் பறிபோக ஆரம்பித்ததுதான் கொடுமை.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கள் வலுக்க ஆரம்பித்தன. சில மாநில அரசுகள் தமதளவில் சட்டங்களை இயற்றின. ஆனாலும், ‘மத்திய அரசு சட்டம் இயற்றுவதுதான் சரியான தீர்வாக இருக்கும்’ என்று பலரும் முறையிட்டார்கள்.
ஆனால், ‘ஆன்லைனில் விளையாடுவது மட்டும் போதாது. இந்தியாவை இந்தத் துறையில் உலகின் முன்னணி நாடாக நிலை நிறுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்’ என்று கடந்த ஆண்டின் சுதந்திர தின உரையில், புளகாங்கிதப்பட்டுப் போய் பேசி அதிர்ச்சி கொடுத்தார் பிரதமர் மோடி.
அடுத்தடுத்து உயிர்கள் பறிபோய்க்கொண்டே இருக்க, ‘ஆன்லைன் பண விளையாட்டுகளால் சமூக - பொருளாதாரச் சீரழிவுகள் அதிகரித்து வருகின்றன’ என்றபடி ஆன்லைன் கேமிங் தடை மசோதாவை அதிரடியாக இப்போது மக்களவையில் நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.
இந்திய ஆன்லைன் கேமிங் சந்தை 2024-25-ல் ரூ.33,000 கோடி அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆனால், அதில் 85% பண விளையாட்டுகளே. இதன்மூலம் ரூ.20,000 கோடி வரை அரசுக்கு வரி வசூலாகி வந்தது. ஆனாலும், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு தடை மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதை அனைவருமே வரவேற்க வேண்டும்.
இந்த மசோதா - ஸ்போர்ட்ஸ், கல்வி மற்றும் திறன் வளர்ப்பு சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவித்து ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் சூதாட்டமாக இருக்கும் பண விளையாட்டுகளைத் தடைசெய்யவும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு உதவும் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கும் இதே தண்டனைதான். இந்தச் சூதாட்டங்களுக்காக விளம்பரம் அல்லது பிரசாரம் செய்தால், இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50 லட்சம் அபராதம்!
அரசாங்கத்தின் அனுமதியோடு நடைபெற்று வந்த ஆன்லைன் கேம்கள், இந்த மசோதா மூலம் தடை செய்யப்படவிருக்கின்றன. அதேசமயம், முறைப்படுத்தப்படாத தளங்களில் விளையாடுவது, சட்டவிரோத பணப் பரிமாற்றம், டேட்டா திருட்டு என்று தேசத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் அளவுக்கான ஆபத்து சூழவிருப்பதை மறுத்துவிட முடியாது. அவற்றுக்கான தீர்வுகளையும் இதே வேகத்துடன் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
குற்றங்கள் களையப்பட வேண்டும்... வேர்வரை!
- ஆசிரியர்