சென்னை மாவட்டம் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரித்து வருகிறார். அந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி தொடங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பிரபுவுக்கும் அவருடன் வேலை பார்க்கும் சில பெண் ஊழியர்களுக்கும் ஆபாசமான குறுஞ்செய்திகள் வந்துள்ளது. இதனை பார்த்து பிரபு அதிர்ச்சியடைந்தார்.
இந்த நிலையில் அந்த ஆபாச பதிவுகளை நீக்க வேண்டும் என்றால் கிரிப்டோ வாலட்டில் பத்து லட்ச ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என அந்த ஐடியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபு சென்னை பெருநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(25) என்பவர் போலியான இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் பணத்தைப் பறிக்க முயன்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது வெங்கடேஷின் தோழி ஒருவர் அரும்பாக்கம் தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர 3 லட்ச ரூபாய் பணத்தை முன்பணமாக கொடுத்துள்ளார்.
ஆனால் வேலையும் கொடுக்காமல் பணத்தையும் திரும்ப தராமல் பிரபு உள்ளிட்ட சில ஊழியர்கள் அலைக்கழித்துள்ளனர். பின்னர் வெங்கடேஷின் தோழி நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த 3 லட்ச ரூபாய் பணத்தை திரும்ப வாங்கியுள்ளார். தனது தோழியை அலைக்கழித்ததால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் போலியான ஐடி மூலம் ஆபாச பதிவுகளை அனுப்பி பழிவாங்க நினைத்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.