சென்னை மாவட்டம் முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது இரண்டாவது மனைவி பாத்திமா. நேற்று முன்தினம் கோபாலகிருஷ்ணனும் பாத்திமாவும் ஒருவர் மீது ஒருவர் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் பாத்திமா அளித்த புகாரில் எனது இரண்டாவது கணவர் கோபாலகிருஷ்ணன் என் மீது சந்தேகப்பட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார்.
நான் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது என்னை வழிமறித்து சரமாரியாக தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதே போல கோபால கிருஷ்ணன் அளித்த புகாரில் என் மனைவியின் மீது சந்தேகம் உள்ளது. எனவே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது மது போதையில் இருந்த கோபாலகிருஷ்ணன் திடீரென காவல் நிலையத்தில் உருண்டு புரண்டு நெஞ்சு வலிப்பது போல துடித்தார். அவரை ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.
அப்போது அவர் போலீசாரை பார்த்து என் மீது எப்படி நடவடிக்கை எடுக்கறீங்க என்று பார்க்கிறேன், உங்களை என்ன செய்கிறேன் பாருங்க என கூறி சென்றார். அதிலிருந்து சிறிது நேரத்தில் நான்கு போலீசார் தன்னை தாக்கியதாக உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கதறி அழுவது போல கோபாலகிருஷ்ணன் சோசியல் மீடியாவில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இதனை பார்த்த போலீசார் பாத்திமாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, தன் கணவர் பிளேடால் தன்னைத்தானே அறுத்துக் கொண்டு போலீசார் மீது பழி போடுவதாக கூறினார்.
இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது போலீசார் கைது செய்து விடுவார்களா என்ற அச்சத்தில் தன்னை தானே அறுத்துக் கொண்டு நாடகம் ஆடியதாக கூறினார்.
பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கோபாலகிருஷ்ணன் காவல் நிலையத்திற்கு சென்று என்னை மன்னித்து விடுங்கள் என கூறி அழுது புலம்பியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.