த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு வெற்றிகரமாக முடிந்ததாகவும், அதில் விஜய் நீண்ட உரையாற்றியதாகவும் தெரிவித்துள்ள நிலையில், அந்த உரையின் உள்ளடக்கம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’வில் அவர் பதிவிட்ட கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தன் உரையில் பா.ஜ.க.வை “கொள்கை எதிரி” என்றும், தி.மு.க-வை “அரசியல் எதிரி” என்றும் குறிப்பிடினாலும், பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை நீக்குவதற்கான மசோதா, போலி வழக்குகள், தேர்தல் ஆணைய ஊடாக நடைபெறும் ஊழல்கள் குறித்து எதையும் பேசாதது ஏன் என்று வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட ஸ்னோலினை நினைவு கூறிய விஜய், அந்தக் கொடூர சம்பவத்திற்கு பொறுப்பான அதிமுகவை விமர்சிக்க தவறியுள்ளார் என்றும் வன்னி அரசு சுட்டிக்காட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த கருத்துகளை வழிமொழிந்த விஜய், அதிமுக – பாஜக கூட்டணியின் மறைமுக பங்குதாரராகவே செயல்படுகிறார் எனக் கூறிய வன்னி அரசு, “இந்த மாநாடு வெறும் நீளமான வசனங்களின் தொகுப்பாகவே அமைந்தது” என தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.