நம்ம சிங்கார சென்னைக்கு வேண்டுமானால் 386 வயது ஆகலாம். ஆனால், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற அதன் முக்கியமான பகுதிகளுக்கு 2000ம் வயதுக்கு மேல் இருக்கும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
பழைய கற்கால மனிதர்கள் சென்னைப் பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. அதாவது, இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பழைய கற்கால மனிதர்கள் இன்றைய பல்லாவரம் பகுதியில் வாழ்ந்ததற்கான பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. அதேபோல், பெருங்கற்காலம் எனப்படும் கி.மு 1000ம் ஆண்டுகளில் மனிதர்கள் இங்கே வசித்ததற்கான ஆதாரம் குன்றத்தூர் பகுதியில் கிடைத்துள்ளது.
சங்க காலத்தில் இன்றைய மைலாப்பூர் பகுதியில்தான் உலகம் புகழும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்தார் என்று கூறப்படுகிறது. இன்றும் அங்கு அவருக்கு கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவரின் காலம் கி.பி 31ம் ஆண்டு என்று கணக்கிடப்படுகிறது.
அதேபோல் கிறிஸ்தவ பாரம்பரியத்திலும் சென்னைக்கு முக்கிய இடம் உண்டு. இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமையார் இன்றைய சென்னையின் சாந்தோம், சின்னமலைப் பகுதியில் வாழ்ந்து கிறிஸ்தவத்தைப் பரப்பியதாக கூறப்படுகிறது. அவர் பரங்கிமலை என்று அழைக்கப்பட்ட புனித தோமையார் மலையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பிற்காலத்தில் மயிலாப்பூர் பகுதியில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் புனித தோமையார் (செயிண்ட் தாமஸ்) நினைவாக குடியேற்றத்தை ஏற்படுத்திய இடம் ஒன்று சாந்தோம் என்று அழைக்கப்படுகிறது.8ம் நூற்றாண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் இருந்ததற்கான ஆதாரம் அதில் உள்ள கல்வெட்டு மூலம் அறியலாம். பல்லவர் ஆட்சிக்காலத்தில் அங்கு தமிழ் - சமஸ்கிருதத்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ளது.
இதன்பிறகு பலருடைய ஆட்சியின் கீழ் சென்னை பகுதி இருந்திருக்கிறது. கூவம் கடலில் கலக்கும் இடத்துக்கு அருகே யாருக்கும் பயனில்லாத மணல் திட்டை இங்கிலாந்தின் பிரான்சிஸ் டே என்பவர் நாயக்கர்களிடமிருந்து வாங்கி அங்கு கோட்டை கட்டிய பிறகுதான் சென்னை என்ற நகரத்தின் வரலாறு தொடங்குகிறது. 2020 ஆகஸ்ட் 22ம் தேதியுடன் அதற்கு 381 வயது.
இந்தியாவின் அறிவியல்பூர்வமான வரைபடத்தை ஆங்கிலேயர்கள் 1802ம் ஆண்டு தயாரிக்க ஆரம்பித்தனர். இதற்கான நில அளவைப் பணி புனித தாமஸ் மலையில் இருந்துதான் தொடங்கியது.
இந்தியாவின் முதல் மாநகராட்சி, முதல் காவல் நிலையம், முதல் தபால் சேவை என்று பல சரித்திரங்கள் சென்னையோடு பின்னிப் பிணைந்துள்ளன.