அசாமில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி, மேலும் ஓராண்டுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் இந்திய குடியுரிமை பெறுவதை தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அங்குள்ள பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் ஆதார் அடையாள அட்டை வழங்க அசாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா குறிப்பிடுகையில், 'இதுவரை ஆதார் அட்டை பெறாத பிற சமூகத்தினருக்காக செப்டம்பரில் சிறப்பு முகாம் நடத்தப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், மாவட்ட போலீஸ் உயரதிகாரியை அணுகி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை மற்றும் வெளிநாட்டினர் தீர்ப்பாய அறிக்கையுடன், ஆதார் விண்ணப்பதாரரின் விபரங்களை சரிபார்த்த பிறகே, அடையாள அட்டையை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.