மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநில மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றியபோது, தே.மு.தி.கவை நிறுவிய மறைந்த கேப்டன் விஜயகாந்தை பற்றி பேசினார்.
“நான் மதுரை மண்ணில் கால் வைக்கும் நேரத்தில், மனதில் ஓடிக்கொண்டே இருந்த ஒரே ஒருத்தர் கேப்டன்தான். எம்.ஜி.ஆரை போலவே எனக்கு அரசியல் மற்றும் சினிமாவில் பிடித்தவர். எம்.ஜி.ஆருடன் நேரில் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், கேப்டனோடு பல தருணங்களில் நேரில் பழகியிருப்பதில் பெருமை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த உரையின் பின்னணியில், கேப்டனைப்பற்றிய விஜய்யின் பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “விஜய் எப்போதும் எங்கள் வீட்டு பையன்தான். கேப்டன் நட்சத்திரமாக மிளிர்ந்த காலத்திலிருந்து, விஜய் பல படங்களில் அவருடைய சிறுவயது கேரக்டரை நடித்திருக்கிறார்.
கேப்டனும் எஸ்.ஏ. சந்திரசேகரும் நெருங்கிய நட்பில் இருந்தார்கள். அரசியலுக்குள் வந்ததற்காக அந்த உறவை மறைக்க முடியாது. விஜய் அண்ணன் என அழைத்திருக்கிறார். அது அவரது உணர்வின் வெளிப்பாடாகவே பார்க்கிறோம்” என்றார்.
மேலும், பிரேமலதா தொடர்ந்தும் கூறியதாவது, “விஜய்யின் படத்துக்காக கேப்டனின் ஏஐ வடிவத்தை பயன்படுத்த அனுமதி கொடுத்ததே நம் குடும்பத்தின் நம்பிக்கையை காட்டுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதி இல்லாமல் கேப்டனின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையை தெரிவித்தேன். ஏனெனில், கேப்டன் எம்.ஜி.ஆரை அவரது மனதின் குருவாக ஏற்றுக்கொண்டவர். அதேபோல், இன்று விஜயும் அதே பாதையில் நடக்கின்றது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டும்தான்; வேறு யாராலும் பக்கத்துக்கு கூட வர முடியாது” என உறுதியாக தெரிவித்தார்.