நாளை மறுநாள் சென்னை வருகிறார் சுதர்சன் ரெட்டி..! முதல்வரை சந்தித்து ஆதரவு கோர முடிவு..
Top Tamil News August 22, 2025 10:48 PM

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, நாளை மறுநாள் (ஆக24) சென்னை வருகிறார்.  

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், உடனே வாக்குகள் எண்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இதில் பாஜக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆக.20 அன்று அவர் வேட்புமணு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் என்.டி.ஏ கூட்டணி எம்.பிக்கள் முன்னிலையில் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளாரிடம் அளித்தார்.  

இதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் எதிர்கட்சி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.  இவர் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கௌகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். 2007 முதல் 2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (ஆக.21) முடிவடையவுள்ள நிலையில்,  நேற்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சரத்பவார், திமுக எம்பி திருச்சி சிவா உள்பட இந்தியா கூட்டணி எம்.பிக்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி இந்தியா கூட்டணி முதல்வர்கள் மற்றும் எம்.பிக்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். அதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள்(ஆக,24) சுதர்சன் ரெட்டி சென்னை வருகிறார். அவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக எம்.பிக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என ஆதரவு கோரும் அவர், இதேபோல் அடுத்தடுத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.   
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.