ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வெ. எண் 16617) போலி டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளை ஏமாற்ற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்ட இந்த ரெயிலில், சாதாரண பெட்டியில் ஒருவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதே ரெயிலில் பணியில் இருந்த திருச்சி கோட்ட டிக்கெட் பரிசோதகர் கே.எம்.சரவணன், பரமக்குடி ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டபோது, ஏற்கனவே ஒருவர் டிக்கெட்டை பார்த்துவிட்டார் என பயணிகள் தெரிவித்ததால் சந்தேகம் எழுந்தது. உடனே, அந்த நபரிடம் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களை கேட்டு சரிபார்க்க முயன்றார். ஆனால், குறித்த நபர் அதற்காக ஒத்துழைக்க மறுத்ததால், சந்தேகம் மேலும் உறுதியானது.
இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்புப்படை (RPF) போலீசாருக்கும், திருச்சி ரெயில்வே வர்த்தக கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும், பாதுகாப்புப் படை போலீசர்கள் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தெளிச்சாத்தநல்லூர், காட்டுபரமக்குடியைச் சேர்ந்த ராம்பிரகாஷ் என்பதும், டிக்கெட் பரிசோதகராக தன்னை காட்டி பயணிகளிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராம்பிரகாஷ் கைது செய்யப்பட்டு, அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.