புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலையின் மீது ஏறி விஜய்தான் வரவேண்டும் என்று கூறி அட்ராசிட்டியில் ஈடுபட்ட போதை ஆசாமியை காவல்துறையினர் பத்திரமாக கீழே இறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு கீழராஜ வீதி அருகாமையில் உள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி வேலியின் மீது ஏறி ஒருவர் படுத்துக்கொண்டு அட்ராசிட்டியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தபோது அவர் பொற்பனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பதும் இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருவதாகவும் தெரிய வந்தது. மேலும் எதற்காக அண்ணா சிலை மேலே ஏறினார் என்று காவல்துறையினர் கேட்டதற்கு விஜய் தான் வர வேண்டும், புதுக்கோட்டைக்கு விஜய் வரவேண்டும், அப்போது தான் கீழே இறங்கி வருவேன் என்று காவல்துறையினரிடமே அட்ராசிட்டியில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் சமரசமாக பேசி அவரை கீழே இறக்கிய போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை அண்ணா சிலையிலிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.