மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மிதி ஆறு வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், பவாய் பகுதியில் உள்ள ஃபில்டர்பாடா பகுதியைச் சேர்ந்த 30 வயது ஆசிரியரான அமன் இம்தியாஸ் செய்யது, நண்பர்களுடன் மிதி ஆற்றில் நீந்தச் சென்றபோது, திடீரென ஆற்றின் வேகம் அதிகரித்ததால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 19 அன்று காலை 11:30 மணியளவில் நடந்த இந்த சம்பவம், அங்கிருந்தவர்களால் காணொலியாக பதிவு செய்யப்பட்டது. முதலில், அவர் ஆற்றங்கரையில் உள்ள ஒரு சுவரைப் பிடித்து தப்பிக்க முயன்றார், ஆனால் வெள்ளத்தின் வேகத்தால் பிடி தளர்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
அமன் இம்தியாஸ் செய்யது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்பு முயற்சியில் இறங்கினர். அவர்கள் கயிறு ஒன்றை ஆற்றில் இறக்கி மீட்க முயன்றனர், ஆனால் அவர் அதைப் பிடிக்க முடியாமல் மேலும் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்.
இருப்பினும், பவாயின் ஃபுலேநகர் பகுதியில் உள்ளூர் மக்களின் தீவிர முயற்சியால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த மீட்பு முயற்சியின் திகிலூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கனமழையால் மும்பையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்தியில், உள்ளூர் மக்களின் இந்த வீர மீட்பு முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது.