அமித் ஷா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!..நயினார் கையில் புகார் கடிதம்..அண்ணாமலை பற்றி பறக்கும் புகார்? பின்னணி என்ன?
Seithipunal Tamil August 23, 2025 08:48 AM

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ்நாடு பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார். இக்கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் விவரங்கள் மற்றும் எதிர்கால தேர்தல் திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்து அடையும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருநெல்வேலி ஆயுதப்படை வளாகத்துக்கு புறப்படுகிறார். 3.10 மணிக்கு அங்கு இறங்கும் அவர், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள உள்ளார். இந்த விருந்துக்காக நெல்லையின் பாரம்பரிய சுவையோடு தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் சிறப்பாக தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணமாக, நேற்று அதிகாரிகள் மூலம் விருந்துக்கான ஒத்திகையும், வாகனங்களின் இயக்கமும் பரிசோதிக்கப்பட்டன.

3.25 மணிக்கு தச்சநல்லூர் பகுதியில் உள்ள மாநாட்டு மைதானத்தை அடையும் அமித் ஷா, பூத் கமிட்டி மாநாட்டில் சிறப்பு உரையாற்ற உள்ளார். மாலை 5 மணிக்குப் பின் அங்கிருந்து புறப்படும் அவர், தூத்துக்குடி விமான நிலையம் வழியாக டெல்லி திரும்புகிறார்.

இந்நிலையில், பாஜக பூத் கமிட்டி அமைப்பில் 50% பேர் போலியானவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்ணாமலை காலத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில், இல்லாத நபர்களின் பெயர்கள் பூத் கமிட்டியில் இடம்பெற்றதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷிடம் புகார் அளித்துள்ளார். இதே குற்றச்சாட்டை அமித் ஷாவிடம் நேரடியாக தெரிவிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

பாஜகவின் நீண்டகால திட்டமாக இருந்த பூத் கமிட்டி அமைப்பு, அண்ணாமலை தலைமையில் முழுமையாக செயல்படவில்லை. எனவே 2026 தேர்தலை முன்னிட்டு, பூத் கமிட்டி அமைக்கும் பணி விரைவாக நடைபெற வேண்டும் என்பதில் இன்றைய ஆலோசனை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மாநில நிர்வாகிகள் குழுவிலும், மாவட்டத் தலைவர்களின் பொறுப்புகளிலும் விரைவில் மாற்றம் ஏற்படலாம் எனவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், “அமித் ஷா நெல்லையில் டீ அருந்தப் போகிறார்” என்ற செய்தி, மாநாட்டை விடவும் தற்போது நெல்லை நகரில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.