திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு அருகில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து ஒன்று, ஏரிக்கரை தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மீஞ்சூரில் இருந்து பொன்னேரிக்கு வந்துகொண்டிருந்த விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பேருந்து, காட்டூர் - தத்தைமஞ்சி சாலைப்பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, பேருந்து சாலையோர ஏரிக்கரை தடுப்புச்சுவரில் மோதி, ஒரு சக்கரம் கீழே இறங்கிய நிலையில் அந்தரத்தில் நின்றது.
விபத்துக்கான முதற்கட்ட விசாரணையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேருந்தின் பிரேக் செயலிழந்தது தெரியவந்துள்ளது. மழை காரணமாக சாலை ஈரமாக இருந்ததும் விபத்துக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்தபோது பேருந்தில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட சுமார் 8 பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர். பேருந்து திடீரென நின்றதும், அவர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பேருந்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மழை காரணமாக அதிக பயணிகள் இல்லாததால், பெரிய சேதங்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Edited by Mahendran