116 வயது வரை வாழ்ந்த மூதாட்டி! இளம் தலைமுறைக்கு கூறிய நீண்ட ஆயுளின் ரகசியம்!
Tamilspark Tamil August 24, 2025 05:48 AM

உலகின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் நீண்ட ஆயுள் பெறும் அதிசயம் இங்கிலாந்தை சேர்ந்த மூதாட்டி எதெல் கேட்டர்ஹாம் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது. 116 வயது வரை வாழ்ந்த அவர், தனது வாழ்வியல் தத்துவத்தால் இளம் தலைமுறைக்கு பெரும் ஊக்கத்தை வழங்கியுள்ளார்.

வரலாற்றைத் தொட்ட வாழ்க்கை

1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் பிறந்த எதெல் கேட்டர்ஹாம், டைட்டானிக் கப்பல் விபத்திற்கும், ரஷ்யப் புரட்சிக்கும் முன் காலத்தில் பிறந்தவர். இரண்டு உலகப் போர்களையும், ஆறு மன்னர்களையும், 27 பிரதமர்களையும் கடந்து வாழ்ந்த அவரது வாழ்க்கை, ஒரு வரலாற்று சுவடாக மாறியுள்ளது.

கின்னஸ் சாதனை

116 வயதில் வாழ்ந்து கின்னஸ் சாதனை பெற்ற கேட்டர்ஹாம், இந்த சாதனையை பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ மறைவுக்குப் பின்னர் பெற்றார். எட்வர்டியன் யுகம் முதல் செயற்கை நுண்ணறிவு யுகம் வரை வாழ்ந்து வரலாறு பேசும் மனிதராக அவர் திகழ்ந்தார்.

இதையும் படிங்க: மனைவிக்கு திருமண ஏற்பாடு செய்த கணவன்.. 12 ஆண்டுக்கு பின் நடந்த ருசிகர நிகழ்வு.!

நீண்ட ஆயுளின் ரகசியம்

அவரின் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் எளிமையானதாக இருந்தது. “யாருடனும் ஒருபோதும் வாக்குவாதம் செய்ய மாட்டேன். நான் விரும்பியது செய்வேன்” என அவர் கூறியுள்ளார். மன அமைதி மற்றும் சண்டையின்மையே வாழ்வில் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அளிக்கிறது என்பதற்கு அவரது வாழ்க்கையே சிறந்த சான்று.

குடும்பத்தில் நீண்ட ஆயுள்

கேட்டர்ஹாமின் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சகோதரி கிளாடிஸ் பாபிலாஸ் 104 வயது வரை வாழ்ந்துள்ளார். தற்போது மூன்று குழந்தைகளின் பாட்டியாகவும், ஐந்து பேரக்குழந்தைகளின் கொள்ளுப் பாட்டியாகவும் இருக்கும் கேட்டர்ஹாம், குடும்ப இழப்புகள் மற்றும் சவால்களை மன அமைதியுடன் சமாளித்ததாக பகிர்ந்துள்ளார்.

எதெல் கேட்டர்ஹாமின் வாழ்க்கை, இளம் தலைமுறைக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கையே நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்த்தும் வாழ்வியல் பாடமாக திகழ்கிறது.

இதையும் படிங்க: குறைப்பிரசவத்தில் வெறும் 21 வாரங்களில் பிறந்த குழந்தை! 283 கிராம் எடை! தாயும் சேயும் நலம்! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த குழந்தை!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.