சென்னை, கண்ணகி நகர் அருகே தூய்மைப்பணியாளர் வரலட்சுமி என்பவர் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் மரணத்துக்கான துயர்துடைப்பு நிதியாக 01 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும், அவர்களது குழந்தைகளின் கல்விச்செலவை அரசே முழுமையாக ஏற்பதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
''சென்னை, கண்ணகி நகர் அருகே தூய்மைப்பணியாளர் வரலட்சுமி தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். வரலட்சுமிக்கு காலணி வழங்கப்படாததன் விளைவாகவே தூய்மைப்பணி செய்யும்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்திருக்கிறாரெனும் செய்தி பெரும் மனவலியைத் தருகிறது. தூய்மைப்பணியாளர்களுக்கு 35 வகை பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கூறியிருக்கிறது.
அப்படி இருந்தும், மிகவும் அடிப்படையான காலணியும், கையுறையுமே வழங்கப்படாத இழிநிலை நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம். சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் எளிய மக்களான தூய்மைப்பணியாளர்களைப் பணிப்பாதுகாப்பும், உயிர்ப்பாதுகாப்பும் இல்லாத ஒரு கொடுஞ்சூழலில், பணிக்கு அமர்த்துவதும், தனியார்மயப்படுத்தி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதுமான ஆளும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
செயற்கை நுண்ணறிவு உலகை ஆட்டிப் படைக்கும் 21ம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தொடர்வதும், அதில் சாதியின் அடிப்படையில் உழைக்கும் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்குச்செயல்பாடா? மலக்குழி மரணங்களில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என வெளிவரும் புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்த மாநிலத்துக்குமான அவமானம் இல்லையா?
மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதற்குத் தடைவிதித்துச் சட்டமியற்றி, 10 ஆண்டுகள் மேலாகியும் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை?
தூய்மைப்பணியில் ஈடுபடும்போதே இறந்துபோன வரலட்சுமி மரணத்துக்கான துயர்துடைப்பு நிதியாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும், அவர்களது குழந்தைகளின் கல்விச்செலவை அரசே முழுமையாக ஏற்பதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் அரசை வலியுறுத்துகிறேன்'' என்று சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.