துணை ஜனாதிபதி பதவிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக, இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு முதலில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.
அதன்படி சுதர்சன் ரெட்டி தனது முதல் பயணத்தை தமிழகத்துக்கு வரும் வகையில் செய்து உள்ளார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். இன்று காலை அவர் முதலில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பு அண்ணா அறிவாலயத்தில் அல்லது முதலமைச்சரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சுதர்சன் ரெட்டி ஆதரவு கோருவார்.
இதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும் சுதர்சன் ரெட்டி சந்தித்து பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.
இன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களை சுதர்சன் ரெட்டி சந்திக்க உள்ளார். அப்போது எம்.பி.க்களுக்கு அவர் விருந்து அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.