எங்களுக்கு பெஸ்டா கிடைக்கிற இடத்துலதான் எண்ணெய் வாங்குவோம்.. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா!

இந்தியாவிற்கு ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தாலும், சிறந்த ஒப்பந்தம் கிடைக்கும் இடங்களில் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் என்று ரஷ்யாவிற்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "நியாயமற்றது, காரணமற்றது மற்றும் நியாயப்படுத்த முடியாதது" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கிய நோக்கம் என்றும், ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு உலகளாவிய எண்ணெய் சந்தையில் வலிமையை ஏற்படுத்த உதவியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இது வணிக முடிவுகள் வணிக காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை, அரசியல் அழுத்தத்தால் நடக்காது எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்களை இந்தியா சமரசம் செய்து கொள்ளாது என்றும், உள்நாட்டு பங்குதாரர்களைப் பாதுகாப்பதே இந்தியாவின் வர்த்தகக் கொள்கை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து "எங்கள் நோக்கம் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே. இந்தியாவின் ஒத்துழைப்பு ரஷ்யா உட்பட பல நாடுகளுடன் உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவியுள்ளது. அமெரிக்காவின் முடிவு நியாயமற்றது. தேசிய நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்" என்று வினய் குமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ரஷ்யாவிற்கு எண்ணெய் கொடுப்பதில் எந்த தடையும் இல்லை என்றும், இந்தியா மற்றும் ரஷ்யா தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்து கொள்வதற்கான முறையை வைத்துள்ளன என்றும் குமார் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் தவிர்த்து, மின்னணுவியல், வாகனங்கள், ஜவுளி மற்றும் கட்டுமான பொருட்கள் போன்ற துறைகளில் ரஷ்யாவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது. டிஜிட்டல் சேவைகள், நிதி சார்ந்த பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா ரஷ்யாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கும் நாடுகளைத் தண்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியா தனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது எனவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.