தன்னை மதிக்காமல் திருமணம்! மனைவி, மகனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்! - நெல்லையில் அதிர்ச்சி!
WEBDUNIA TAMIL August 25, 2025 07:48 PM

திருநெல்வேலியில் குடும்ப தகராறில் மனைவி, மகனை ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் காரைக்குளம் பகுதியில் உள்ள சர்ச் தெருவை சேர்ந்தவர் சக்காரியா. 66 வயதாகும் இவருக்கு மெர்சி என்ற மனைவியும், ஹென்றி, ஹார்லி என்ற மகன்களும், ஹெலன் என்ற மகளும் உள்ளனர். கடந்த சில காலங்களுக்கு முன்னதாக சக்காரியாவுக்கும் மெர்சிக்கும் ஏற்பட்ட சண்டையால் மெர்சி தனது மகன்கள், மகளை அழைத்துக் கொண்டு அதே தெருவில் வேறு வீட்டில் குடியேறியுள்ளார். இதனால் சக்காரியா மட்டும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மூத்த மகன் ஹென்றிக்கு திருமணம் ஏற்பாடான நிலையில் அதில் சக்காரியாவிற்கு உடன்பாடு இல்லை என்றும், ஆனாலும் அவரை அழைக்காமலே மெர்சி திருமணத்தை நடத்தி முடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சக்காரியாக கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சக்காரியா வீட்டில் உள்ள தங்களது சில பொருட்களை எடுப்பதற்காக மெர்சியும், இரண்டாவது மகன் ஹார்லியும் சென்றுள்ளனர். அப்போது அவர்களை ஒரு அறைக்குள் அடைத்த சக்காரியா உள்ளே பெட்ரோலை ஊற்றி அவர்களை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அதன் பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது எதிர்பாராமல் அவர் மீது நெருப்பு பற்றியதா என தெரியவில்லை. ஆனால் அவரும் அந்த தீயில் சிக்கிக் கொண்டுள்ளார்

வீட்டிலிருந்து தீ வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். தீயை அணைத்து உள்ளே சென்றபோது மூன்று பேரும் உடல் கருகி உயிருக்கு போராடியுள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மெர்சியும், ஹார்லியும் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தீ வைத்த சக்காரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.