உத்தரப் பிரதேச மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு யாதவ். டிரைவராக பணியாற்றும் இவர், தனது மனைவி ஜோதி யாதவ் (வயது 26) மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இவர்களது குடும்பத்தில் 2 மகன்கள், ஒரு பெண் குழந்தை இருந்தனர். ஜோதி யாதவ் குட்கா பழக்கத்திற்கு ஆளாகி, அதற்கு அடிமையாக மாறியதாக கூறப்படுகிறது. தினசரி குட்கா வாங்குவதற்காக கணவரிடம் பணம் கேட்டும், அதற்காக வாதம் செய்தும் வந்த ஜோதிக்கு, கணவருடன் அடிக்கடி மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று காலை பாபு யாதவ் வேலைக்கு செல்ல தயாராகியபோது, ஜோதி பணம் கேட்டார். ஆனால், அவர் மறுத்ததோடு கடுமையாக திட்டியும் விட்டு கிளம்பி சென்றுள்ளார். இதனால் மனவேதனையில் ஆழ்ந்த ஜோதி, வீட்டில் இருந்த தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கலந்த சாறு கொடுத்து, பின்னர் தானும் அதையே குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மாலை வீடு திரும்பிய பாபு யாதவ், 4 வயது மகன் அழுது கொண்டிருப்பதைக் கவனித்து காரணம் கேட்டபோது, “அம்மா எனக்கு கசப்பான சாறு குடிக்க வைத்தாங்க” என கூறியுள்ளார். உடனே வீட்டினுள் ஓடிய பாபு, மனைவியையும் மற்ற இரண்டு குழந்தைகளையும் அனுமனிக்கற்ற நிலையில் காண, அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
வழியிலேயே அவரது 2 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மற்ற மூவரும் மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். ஆனால், ஜோதி மற்றும் 4 வயது மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போதும் 5 வயது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. “குட்கா வாங்க பணம் தரவில்லை” என்ற காரணத்துக்காக தாயே தனது குழந்தைகளை கொன்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.