தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விகாராபாத் மாவட்டம் காமா ரெட்டி கூடா பகுதியைச் சேர்ந்தவர்கள் சுவாதி-மகேந்தர் ரெட்டி தம்பதியினர். இந்த நிலையில், கர்ப்பிணி பெண்ணான சுவாதிக்கும், கணவருக்கும் இடையே திடீரென குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மகேந்தர் ரெட்டி, கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் சுவாதியை வெட்டிக்கொலை செய்துவிட்டு அவரது உடல் உறுப்புகளை துண்டு, துண்டாக வெட்டினார். அதில் ஒரு பகுதியை பிளாஸ்டிக் கவரில் சுற்றி புறநகர் பகுதியில் உள்ள ஆற்றில் வீசினார். இதற்கிடையே உடலை வெட்டும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மகேந்தர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அவர் வெட்டிய உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி விரைந்து சென்று, மகேந்தர்ரெட்டியை கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆற்றில் வீசிய உடல் பாகங்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையடுத்து போலீசார் மகேந்தர் ரெட்டிஇடம் விசாரணை நடத்தியதில், சுவாதி வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத மகேந்தர் ரெட்டி ஏற்கனவே ஒருமுறை மனைவியின் கருவை கலைத்ததுடன், தற்போது மீண்டும் அவர் கர்ப்பிணியானதால் அவரைக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மனைவியை கொலை செய்த மகேந்தர்ரெட்டி, தனது மனைவியை காணவில்லை என்று சுவாதியின் தங்கைக்கு தகவல் தெரிவித்ததுடன், தான் போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.