அகமதாபாத்தில், ஒரு நாயை மோட்டார் சைக்கிளின் பின்புறம் கட்டி, தெருக்களில் இழுத்துச் சென்ற கொடூர சம்பவத்தை அடுத்து, ரமேஷ் படேல் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, படேல் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் விலங்குகள் மீதான கொடுமை தடுப்புச் சட்டம், 1960 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
வீடியோவில், நாய் அசைவற்ற நிலையில் தெருவில் இழுத்துச் செல்லப்படுவது பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு, படேல் அந்த நாயை துன்புறுத்தி அடித்ததாகவும், பின்னர் கடுமையாக காயமடைந்த நிலையில் ஒரு பாலத்தின் கீழ் வீசி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், தற்போது நாடு முழுவதும் நடைபெறும் தெரு நாய்கள் குறித்த விவாதத்தின் நடுவே நிகழ்ந்துள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து, பாதுகாப்பு இல்லங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 11 அன்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், பரவலான எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இந்த உத்தரவை மாற்றியமைத்த நீதிமன்றம், பிடிக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்ட பிறகு மீண்டும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியது.
ஆனால், ரேபிஸ் நோய் உள்ளவை அல்லது ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் நாய்கள் இதற்கு விதிவிலக்காகும். மேலும், இந்த வழக்கின் எல்லையை டெல்லி-என்சிஆருக்கு அப்பால், நாடு முழுவதும் விரிவுபடுத்திய நீதிமன்றம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, தேசிய கொள்கையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.