கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்..!
Webdunia Tamil August 25, 2025 11:48 PM

கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போலீஸார் 650 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குற்றப்பத்திரிகையின்படி, ஜூன் 25 அன்று நடந்த இந்த சம்பவத்தில், கல்லூரியின் முன்னாள் மாணவரான மனோஜித் மிஸ்ரா முக்கிய குற்றவாளி என்றும், அவருடன் ஜைப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி ஆகியோர் உடன் குற்றவாளிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூவரும் முதலாமாண்டு மாணவியான ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த சம்பவத்தை வீடியோக்களாகவும் பதிவு செய்து, மிரட்டி வந்துள்ளனர்.

குற்றவாளிகளின் செல்போன்களில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பல ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள், சுவரில் பொருத்தப்பட்டிருந்த எக்ஸாஸ்ட் ஃபேனின் துளை வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோக்களில் குற்றவாளிகளின் குரல்கள் பதிவாகியுள்ளன. அவற்றின் குரல் மாதிரிகள் பொருத்தமானவையாக இருந்தன. குற்றவாளிகளின் செல்போன் லொகேஷனும் சம்பவ இடத்திலேயே இருந்ததாக தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளும் குற்றவாளிகள் பெண்ணை தாக்கி, பிடித்து வைத்திருப்பதை காட்டுகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மூவர் உட்பட, மொத்தம் நான்கு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பாதுகாப்பு ஊழியர் பினாகி பானர்ஜியும் ஒருவர். சம்பவம் நடந்தபோது, அவர் காவல் துறைக்கோ அல்லது யாருக்குமோ தகவல் தெரிவிக்காமல், தனது அறையைப் பூட்டிக்கொண்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.