திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது குறுக்கே வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி பல்வேறு நகரங்களில் மக்களிடையே ஆளும் திமுக அரசு குறித்த விமர்சனங்களை வைத்து பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் முன்னதாக வேலூரில் பரப்புரை செய்தபோது குறுக்கே ஆம்புலன்ஸ் வர கடுப்பான எடப்பாடி பழனிசாமி, ஆளும் திமுக அரசு தனது பரப்புரையை கெடுப்பதற்காகவே திட்டமிட்டு ஆளில்லா ஆம்புலன்ஸை அனுப்பி குடைச்சல் தருவதாக விமர்சித்திருந்தார்.
அதை தொடர்ந்து நேற்று திருச்சி துறையூரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்வதற்காக மண்ணச்சநல்லூரில் இருந்து வந்துக் கொண்டிருந்தார். அப்போது துறையூர் அதிமுகவினர் கூடியிருந்த பகுதிக்குள் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதை பார்த்ததும் கோபமடைந்த அதிமுகவினர், எங்கள் பரப்புரையை கெடுப்பதற்காக வந்தாயா? எனக் கேட்டு ஆம்புலன்ஸை வழி மறித்து திரும்பி செல்லுமாது ஆம்புலன்ஸை தாக்கியுள்ளனர்.
இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில் ஆம்புலன்ஸை ரிவர்ஸ் எடுத்துச் சென்றார். அதன்பின்னர் அதிமுகவினர் தாக்கியதாக ஆம்புலன்ஸ் டிரைவர் செந்திலும், மருத்துவ உதவியாளர் ஹேமலதாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆம்புலன்ஸ் டிரைவரை அச்சுறுத்தும் விதமாக பேசியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மேல் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K