Indian Cricket Team: அடுத்தது யார்..? இந்திய அணியில் அடுத்தடுத்து ஓய்வு பெற காத்திருக்கும் வீரர்கள்!
TV9 Tamil News August 25, 2025 05:48 PM

இந்திய அணியின் (Indian Cricket Team) நங்கூர பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 24ம் தேதி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமான குறிப்பு மூலம் தனது ரசிகர்களுக்கு புஜாரா தனது ஓய்வை வெளிபடுத்தினார். இப்போது, புஜாரா வர்ணனையுடன் கிரிக்கெட்டில் ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று நம்பப்படுகிறது. புஜாராவுக்குப் பிறகு, இந்தியாவின் இன்னும் சில அனுபவ மூத்த வீரர்களும் விரைவில் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. இவர்களில் அஜிங்க்யா ரஹானே, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் போன்ற மூத்த வீரர்கள் அடங்குவர்.

அஜிங்க்யா ரஹானே:

புஜாராவின் சக பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானேவின் கேரியரும் இப்போது சரிவில் உள்ளடு. கடந்த 2011ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான ரஹானே, இந்திய அணிக்காக இதுவரை 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக இவர், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 37 வயதான ரஹானே மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று கருதப்படுகிறது. எனவே, இவரும் விரைவில் ஓய்வை அறிவிக்கலாம்.

ALSO READ: டெஸ்ட் கிரிக்கெட்டை ஆண்ட அரசன்.. புஜாரா படைத்த 5 அரிய சாதனைகள் இதோ!

இஷாந்த் சர்மா:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இந்தியாவுக்காக 105 டெஸ்ட், 80 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் மொத்தமாக 434 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 36 வயதான இஷாந்த் கடைசியாக 2021ல் நவம்பர் மாதம் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதே நேரத்தில், கடந்த 2016ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டி கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்தார். இப்போது அவரது சர்வதேச வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று கருதப்படுகிறது.

புவனேஷ்வர் குமார்:

ஸ்விங் மற்றும் டெத் ஓவர் பவுலிங்கிற்கு பெயர் பெற்ற புவனேஷ்வர் குமாரும் நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான புவனேஷ்வர் குமார் இதுவரை 21 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 2018ம் ஆண்டும், கடைசி ஒருநாள் போட்டி ஜனவரி 2022ம் ஆண்டும், கடைசி டி20 நவம்பர் 2022ம் ஆண்டும் அமைந்தது. வெறும் 34 வயதான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினமாகத் தெரிகிறது.

முகமது ஷமி:

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் முகமது ஷமி இதுவரை இந்திய அணிக்காக 64 டெஸ்ட், 108 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஷமி கடைசியாக ஜூன் 2023ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். உடற்தகுதி பிரச்சினைகள் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். 34 வயதான முகமது ஷமி தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்வதற்காக போராடி வருகிறது.

ALSO READ: ரோஹித் முதல் புஜாரா வரை.. 2025ல் ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!

உமேஷ் யாதவ்:

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் வாழ்க்கையும் முடிவுக்கு வருகிறது. உமேஷ் யாதவ்க்கு இந்தியாவுக்காக 57 டெஸ்ட், 75 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடினார். கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உமேஷ் யாதவ் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார், அதே நேரத்தில் அவரது கடைசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைந்தது. இளம் பந்து வீச்சாளர்கள் இப்போது அவருக்குப் பதிலாக இந்திய அணியில் வளர்ந்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.