கைகளின் அழகை மேம்படுத்தும் நகங்கள் உண்மையில் உடலின் 'இறந்த செல்கள்', அதாவது, உயிர் இல்லாத செல்கள் ஆகும். ஆனால் இந்த உயிரற்ற நகங்கள் உங்களால் உணரமுடியாத உங்களுடைய ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய விஷயங்களை சொல்லாமல் சொல்லும்.
நகங்களைப் பார்த்தே, ஒருவரின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பலவற்றுடன் தொடர்புடைய பல்வேறு நோய்களைக் கண்டறிய முடியும் என்று கிளினிக்கல் டெர்மட்டாலஜி ரிவ்யூவின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.
கர்நாடக மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 272 நோயாளிகளிடம் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
கிளினிக்கல் டெர்மட்டாலஜி ரிவ்யூ மேற்கொண்ட இந்த ஆய்வில், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களின் நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.
இந்த ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப்பட்ட நோயாளிகளில், 26 சதவீதத்தினருக்கு சுவாசம் தொடர்பான பிரச்னைகள் இருந்தன. 21 சதவீத நோயாளிகளுக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் இருந்தன, 17 சதவீதத்தினருக்கு கல்லீரல் மற்றும் இரைப்பை குடல் (GIT) நோய்கள் இருந்தன. 12 சதவீத நோயாளிகளுக்கு இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகள் காணப்பட்டன.
சுவாச மண்டலம் மோசமடைந்தால், ஒரு நபரின் நகங்களில் அதிக பாதிப்பு காணப்படுகிறது என்பதை இந்த ஆராய்ச்சி கண்டறியந்தது. அதேபோல், உடலில் ரத்தம் தொடர்பான ஏதேனும் நோய் அல்லது கல்லீரல், இரைப்பை, இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், அவை நகங்களில் பிரதிபலிக்கின்றன.
எனவே, உங்களுடைய நகங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பதைப் பார்த்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். நகங்களில் ஏற்படும் எந்த வகையான மாற்றங்களை, நோய்க்கான ஆபத்து எச்சரிக்கையாகப் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
நகங்கள் பொதுவாக உடலின் ஆரோக்கியத்தை பிரதிபலிப்பவை என்றாலும், நகங்களின் அழகை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் சில நேரங்களில் அவற்றில் மாற்றத்தைக் கொண்டுவருகின்றன.
கைகள் மற்றும் கால்களின் நகங்கள், அவற்றிற்கு கீழ் இருக்கும் உடல்பகுதியை காயம் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. விரல்களின் முனைப்பகுதியில் இருக்கும் நகங்கள், உடலை சொறிவதற்கும் பல பொருட்களை உரிக்கவும் உதவுகின்றன.
கிளினிக்கல் டெர்மட்டாலஜி ரிவியூவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, நகங்களின் நிறம் மற்றும் வடிவம் மாறுவது என்பது பல நோய்களுடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது.
இந்த ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்ட முக்கிய அறிகுறிகள், நகவீக்கம் (Clubbing of nails), நகங்களில் நீண்ட கோடுகள் (longitudinal ridging of nails), நகங்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், நகங்களின் நிறமாற்றம் மற்றும் நகங்கள் தட்டையாக மாறுதல் ஆகியவை ஆகும்.
சில நேரங்களில் நகங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தோன்றக்கூடும்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நகங்கள் வளைந்து கீழ்நோக்கி திரும்பி இருப்பதாகவும், நகங்களில் நீண்ட கோடுகள் காணப்படுவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
மெட்ரோ மருத்துவமனை குழுமத்தின் இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் சமீர் குப்தா கூறுகையில், "பொதுவாக மனித நகங்கள் லேசான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அவற்றின் நிறம் வெளிர் நிறமாக மாறினால், உடலில் ரத்தம் இல்லாததை அது குறிக்கிறது."
"அதேபோல், நகங்கள் நீல நிறமாக மாறினால், அது உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைக் குறிக்கும் சயனோசிஸ் நோயைக் குறிக்கிறது. நகத்தின் நீல நிறத்திற்கு காரணம், இதயம் அல்லது நுரையீரல் தொடர்பான நோயாக இருக்கலாம். நோய் என்ன என்பதை அறிய, சிறப்பு சோதனைகள் செய்யப்படவேண்டும்."
சயனோசிஸ் அதாவது நகங்கள் நீல நிறமாக மாறுவது, ஹைபோக்ஸியா, ஆஸ்துமா, நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது.
சுவாச அமைப்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நகங்களில் வீக்கம் (Clubbing of nails) ஏற்படுவது பரவலாக காணப்பட்டது. அத்துடன், நகங்களில் நீண்ட கோடுகள், நகங்கள் அடிக்கடி உடைவது மற்றும் நகங்களின் நிறம் மாறுவது ஆகியவையும் காணப்பட்டன. இதன் பொருள், தங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளைப் பார்ப்பவர்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதாகும்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் நுரையீரல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் ரஷ்மி உபாத்யாய் கூறுகையில், நுரையீரல் தொடர்பான நோய்கள் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அறிகுறிகளாகத் தோன்றுகின்றன.
"உதாரணமாக, சருமத்தின் நிறம் வெளிர் நிறமாக மாறுகிறது. தோல் மெல்லியதாகவும் பளபளப்பாகவும் மாறும். அதேபோல் நகங்களிலும் பல அறிகுறிகள் காணப்படுகின்றன, இவற்றை வைத்து நுரையீரலில் ஏதோ பிரச்னை இருப்பதாக யூகிக்கிறோம்."
நகங்களுடன் தொடர்புடைய முதல் அறிகுறி கிளப்பிங் ஆகும்.
"சமீப காலங்களில், நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் (இது நுரையீரல் திசுக்களைப் பாதிக்கிறது மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது) பிரச்னை அதிகரித்து வருகிறது. ரத்தத்தில் தொடர்ந்து ஆக்ஸிஜன் சப்ளை போதுமானதாக இல்லாவிட்டால், நகங்கள் வரைச் செல்லும் ரத்த நாளங்கள் மெலிதாகிவிடுகின்றன. எனவே, நகங்கள் வீங்கிவிடுகின்றன" என்று அவர் கூறுகிறார்.
இவற்றைத் தவிர, Yellow Nail Syndrome எனப்படும் மஞ்சள் ஆணி நோய்க்குறி என்ற நிலை ஏற்படும்போது, நகங்கள் தடித்து, மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். அப்போது நகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் தோன்றத் தொடங்குகிறது. இந்த நிலை, மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் சீழ் மற்றும் கைலோத்தராக்ஸ் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம். இவை அனைத்தும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் ஆகும்.
கிளினிக்கல் டெர்மட்டாலஜி ரிவ்யூ நடத்திய ஆராய்ச்சியில், இரைப்பை மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்ட 46 நோயாளிகளுக்கு மஞ்சள் ஆணி நோய்க்குறி, நகங்களில் நீள் கோடுகள், கிளப்பிங் மற்றும் நகத்தின் அடிப்பகுதி வெண்மையாகும் தன்மை (Terry's Nail) போன்றவை இருக்கின்றன. அதிலும், நகத்தின் அடிப்பகுதி வெண்மையாகும் தன்மை மிகவும் அதிகமாக காணப்பட்டது.
டாக்டர் சமீர் குப்தாவின் கூற்றுப்படி, சற்று வளைந்து கீழ்நோக்கி சாய்ந்திருக்கும் நகத்தின் கிளப்பிங், ஏதோவொரு நாள்பட்ட நோயைக் குறிக்கிறது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மஞ்சள் நிற நகங்கள், மஞ்சள் ஆணி நோய்க்குறி, நகங்களில் நீள் கோடுகள், கிளப்பிங் மற்றும் நகங்கள் உடையக்கூடியதாக மாறும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது
"சிறுநீரக நோயால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பாதிப் பாதி அதாவது 'லிண்ட்சேயின் நகங்கள்' (Lindsay's nails) மிகவும் பொதுவான அறிகுறியாக இருக்கிறது" என்று காசியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் டாக்டர் பிரஜித் மஜும்தார் கூறுகிறார்.
விரல் நகத்தின் அடிப்பகுதி வெண்மையாகவும், மீதமுள்ள பகுதி சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறமாகவும் இருக்கும் தன்மையை "Half and half nail" (பாதிப் பாதி) என்று அழைப்பார்கள். இது, "லிண்ட்சேயின் நகங்கள்" (Lindsay's nails) என்றும் அறியப்படுகிறது.
இருப்பினும், சில நேரங்களில் ஏதேனும் காயம் அல்லது நகங்களின் அழகை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, நகங்களில் இவ்வாறு பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
எனவே, உங்களுடைய நகத்தில் ஏதேனும் வித்தியாசம் அல்லது மாற்றம் தென்பட்டால், அதை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவுக்கும் செல்லவேண்டாம், மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுவது மிகவும் முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு