ATM மோசடி: 'கேன்சல்' பட்டனை இருமுறை அழுத்தினால் பாதுகாப்பா? - உண்மை என்ன?
Vikatan August 26, 2025 06:48 AM

வங்கி சேவைகளை எளிதாக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் இன்று அனைவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. ஆனால், இதே ATM களை குறிவைத்து பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தினசரி பல ஏடிஎம் மோசடி சம்பவங்கள் நடக்கின்றன.

சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஏடிஎமில் பணம் எடுத்த பிறகு ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் PIN மோசடி தடுக்கப்படும் என்ற தகவல் பரவலாக வைரலானது. இதை பலரும் நம்பி பின்பற்றத் தொடங்கினர்.

RBIயின் பெயரில் போலி தகவல்

இந்த தகவலை Reserve Bank of India (RBI) அறிவித்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், PIB Fact Check அதனை மறுத்து, “RBI இதுபோன்ற அறிவுரையை எதுவும் வழங்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.

ATM

ஏடிஎமில் உள்ள கேன்சல் பட்டன் பரிவர்த்தனையை ரத்து செய்வதற்கே பயன்படும், அது PIN திருட்டைத் தடுப்பதோ, ஹாக்கிங் அல்லது ஸ்கிம்மிங் மோசடிகளை தடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

2 மாதங்களுக்கு முன்பே இது குறித்து விளக்கப்பட்டிருந்தாலும் சிலர் அந்த போலி தகவல்களை பின்பற்றி வருகின்றனர்.

பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?

ஏடிஎம் மோசடிகளைத் தவிர்க்க வங்கிகளும் நிபுணர்களும் பரிந்துரைக்கும் சில பாதுகாப்பு நடைமுறைகள் இதோ,

ஏடிஎம்-க்கு செல்லும் முன் இயந்திரத்தில் சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் உள்ளனவா என்று பாருங்கள். ஏதாவது வித்தியசமாக இருந்தால் அந்த ATM-ஐ பயன்படுத்த வேண்டாம், உடனே வங்கிக்கு தகவல் தெரிவிக்கவும்.

ATM பரிவர்த்தனைகளுக்கான SMS, மின்னஞ்சல் அலர்ட்களை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். சந்தேகமான பரிவர்த்தனை தெரிந்தவுடன் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்.

கார்டு தொலைந்தால் அல்லது திருடப்பட்டால், உடனடியாக மொபைல் வங்கி அல்லது வாடிக்கையாளர் சேவை மூலம் கார்டை ‘block’ செய்யவும்.

ஒவ்வொரு 3–6 மாதத்துக்கும் உங்கள் ATM PIN-ஐ மாற்றவும். பிறந்த தேதி, 1234, 1111 போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண்களை தவிர்க்கவும்.

ATM பயன்படுத்தும் போது கவனமாக இருந்தால் மட்டுமே மோசடிகளைத் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.