கனரா வங்கியில் ரூ. 117.06 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில், தொழிலதிபர் அமித் அசோக் தேபதே என்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
தொழிலதிபர் தேபதே, ஆகஸ்ட் தங்கியிருந்த விடுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், 50-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், ரூ. 9.5 லட்சம் ரொக்கம், ரூ. 2.33 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், தங்கக்கட்டிகள், இரண்டு வாகனங்கள் மற்றும் பல டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தேபதேவுக்கு ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க சிறப்பு பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேபதேவுக்கு சொந்தமான கேலக்ஸி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அண்ட் கான்ட்ராக்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மிட்சோம் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே விற்கப்பட்ட அல்லது பலமுறை அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை கனரா வங்கியில் அடமானம் வைத்து பல கோடி ரூபாய் கடனை பெற்றன. பின்னர், அந்த கடன் பணத்தை திசைதிருப்பி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
Edited by Siva