இந்திய விமானப்படையில், ரபேல், சுகோய், மிக், மிராஜ், தேஜஸ் போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் உள்ளன. நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விமானங்களுக்கு இந்திய விமானப்படை மாறுவதை முன்னிட்டு, பழைய மாடல் விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு செய்யப்பட்டது.
இதன்படி மிக் 21 ரக விமானங்களின் சேவை செப்.,26ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பிகானிரில் நடந்த நிகழ்ச்சியில், அந்த ரக விமானத்தில் பறந்து தன் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் மிக்-21 போர் விமானங்களின் சாகசம் நடந்தது. அதை தொடர்ந்து ஏ.பி சிங் கூறியதாவது: 1960 களில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டதிலிருந்து மிக்-21 இந்திய விமானப்படையின் பணிக்குதிரையாக இருந்து வருகிறது. நாங்கள் இன்னும் அதைத் தொடர்கிறோம். இது வரலாற்றில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாக இருந்தது. 11,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் 60க்கும் மேற்பட்ட நாடுகளால் இயக்கப்படுகின்றன.
பறக்க இது ஒரு அற்புதமான விமானம். மிகவும் சுறுசுறுப்பானது மற்றும் கையாளக்கூடியது, ஆனால் தற்போது தேஜாஸ் மற்றும் ரபேல் போன்ற புதிய தளங்களுக்கு செல்ல வேண்டிய நேரம் என்பதால்,அதன் பழைய தொழில்நுட்பத்திற்கு சற்று ஒய்வு அளிக்கப்படுகிறது.
அடுத்த மாதம் போர் விமானங்கள் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதற்கு முன்னதாக நடைபெறும் உணர்ச்சிபூர்வமான தருணத்தை இன்று அனுபவித்தேன்.
சண்டிகரில் வரும் செப்டம்பர் மாதம் 26 ல் மிக்-21 போர் விமானம் விடைபெறும் விழா நடைபெற உள்ளது.
இவ்வாறு ஏ.பி சிங் கூறினார்.