வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சென்னையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் எவ்வளவு வேண்டுமென்றாலும் சொல்ல முடியும் என்னால். பிறந்தது முதல் என் முப்பத்திமூன்று அகவை வரை வாழ்ந்தது சென்னையில்தான். இல்லையில்லை... மெட்ராஸ்'ஸில்.
26, கட்டைத் தொட்டித் தெரு, திருவல்லிக்கேணி:
நான் பிறந்து, முதல் பதினைந்து வருடங்கள் வாழ்ந்தது இந்த வீட்டில்தான். ஐந்து குடும்பங்கள் சேர்ந்து வாழ்ந்த ஒண்டு-குடித்தன வாடகை வீடு இது.
நம் அனைவருக்கும் குழந்தைப்பருவதின் நினைவுகள் என்பது விலைமதிப்பற்றது. அவ்வகையில் இந்த வீடு என் மனதிற்கு மிக நெருக்கம். மட்டுமில்லாமல் என் அப்பா உடனான எல்லா நினைவுகளும் இந்த வீட்டில்தான்.
என் அப்பா இறந்து ஓரிரு வருடங்களில் இந்த வீட்டைக் காலி செய்தோம். இந்த வீட்டை விட்டு பிரிந்து முப்பது வருடங்கள் கடந்திருந்தாலும், பிறகு பல வீடுகளில் வாழ்ந்திருந்ததாலும் இப்போதும் என் கனவில் அவ்வப்போது இந்த வீடுதான் வரும்.
இப்போதெல்லாம் 80ஸ், 90ஸ் நினைவுகள் என்று சோஷியல் மீடியாவில் வருகிறதே… அவை அனைத்தையும் அனுபவித்துள்ளேன். தோழிகளுடன் தெருவில் விளையாடுவது, மின்சாரம் போனால் எல்லாருமே வெளியில் வந்து வம்படிப்பது, டிவி இருக்கும் வீட்டிற்குச் சென்று ஒளியும் ஒலியும் பார்த்தது, ஒரு நாள் வாடகைக்கு வீசீஆர் வாங்கி, அக்கம்பக்கம் எல்லாருடனும் சேர்ந்து 2,3 சினிமா பார்ப்பது என்று நம் அன்றாட வாழ்வே அக்கம்பக்கத்து நட்புறவுகளோடு பின்னி பிணைந்தே இருந்தது.
முதன் முதலில் வீட்டிற்கு tube light, மின்விசிறி, பீரோ, gas connection, மிதிவண்டி, டிவி என்று வாங்கிய நாட்களும் இந்த வீட்டில்தான். இப்படிப் பல விதங்களில் முக்கியமான வீடு இது.
லேடி வெல்லிங்டன் சீமாட்டி அரசு மேல் நிலைப் பள்ளி:
நான் கேஜி'யிலிருந்து பன்னிரெண்டாவது வரைப் படித்தது இங்குதான். வீட்டிலிருந்து ஒன்றரைக் கிமீ இருக்கும். நடந்துதான் போய் வர வேண்டும். சில வருடங்கள் வரை, "ஆயா" என்று நாங்கள் அழைக்கும் ஒரு அம்மாவுடன் போய் வருவேன். பள்ளி பை -ஐயும் மாட்டிக் கொண்டு, என்னைப்போல பல குழந்தைகளைக் கைப் பிடித்து அழைத்துப் போவார். அந்த அம்மாவின் முகம் இன்னும் நான் மறக்க வில்லை. பெரிய போட்டு வைத்த முகம், சிறிய உருவம்.
மறக்கவே முடியாத பசுமையான பள்ளி நாட்கள். ஆங்கிலேயர்க் காலத்துப் பள்ளிக் கட்டிடம். பெரிய பள்ளி. விஸ்தாரமான, காற்றோட்டமுள்ள பள்ளி அறைகள் (சிலவற்றைத் தவிர) . பெரிய விளையாட்டு மைதானங்கள். மிகத் திறமையான ஆசிரியர்கள். அவ்வளவு அருமையாகப் பாடம் நடத்துவார்கள். கழிவறையைத் தவிர அனைத்துமே தரமானது.
விவேகானந்தா இல்லம், நான் படித்த காலத்தில், சாதாரணமாக இருந்தது. எங்களது ஏழாவது வகுப்பறைகள் இதன் பக்கத்தில் இருந்ததால், அங்கு சென்று பெரிய பாறைகள் மேல் ஏறி அமர்ந்து சாப்பிடுவோம். பீச் பக்கம் என்பதால், பேய் காற்று வீசும். இப்போது விவேகானந்த இல்லத்தை, பள்ளியிலிருந்து பிரித்து, வேறு நுழைவாயில் வைத்து, சிறப்பாய் செய்து விட்டார்கள்.
லேடி வெல்லிங்டன் ஆசிரியர்ப் பயிற்சி பள்ளி அப்போது மிகப் பிரபலம். வருடா வருடம் அங்கு படிக்கும் அக்காக்கள், எங்களுக்குப் பாடம் எடுக்க ஒரு மாதம் வந்துவிடுவார்கள். அந்த நாட்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுடன் அக்கா அக்கா என்று ஆசையாக உரையாடுவோம். இப்போது இதெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
திருவல்லிக்கேணியில் வளர்ந்த குழந்தைகள் பாட்டு, ஹிந்தி வகுப்புகளுக்குச் செல்லாமல் இருக்க மாட்டார்கள். நானும் அப்படிச் சென்றவள்தான்.
"ஸ்ரீனிவாசன்" நூலகம் சென்று புத்தகம் எடுத்துப் படித்த நாட்கள் ஏராளம். படித்ததென்னவோ fictions என்றாலும், லைப்ரரிக்குப் போகணும்னா ஒரு பெருமை வந்து விடும். இன்னும் இந்த நூலகம் உள்ளது.
பார்த்த சாரதி கோவில்:
சென்னையில் பிரசித்தமான பார்த்த சாரதி கோவிலின் அருகில்தான் நாங்கள் இருந்தோம். வருடத்திற்கு இரண்டு முறை வரும் பத்து நாள் உற்சவங்கள், தேரோட்ட நாள், தெப்போத்சவ நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா, மார்கழி விடியற் காலைகள் என்று அனைத்திற்கும் கோவில் செல்வோம். விசேஷம் இல்லாவிட்டாலும் கோவில் செல்வோம்.
புரட்டாசியில் பெரிய நாமம் இட்டு ரோட்டிலேயே உருண்டு பிரார்த்தனைச் செய்வார்கள். ஸ்வாமி வீதியில் வலம் வரும் நாட்களில், அந்தந்த வீட்டு வாசலில் பெரிய பெரிய கோலம் போட்டிருப்பார்கள். தீபாவளி அன்று மாலை, ஸ்வாமி வீதி உலா வர, அந்த நான்கு வீதிகளில் பட்டாசு கணக்கில்லாமல் வெடிக்கும். நான் வியந்தது பார்த்ததில் சில இவை.
எனக்குப் பிடித்த பார்த்தசாரதி கோயில் பிரசாதம் புளியோதரை, அதிரசம் என இவ்வளவும் பசுமையா நினைவுல இருக்கு.
கோயில் விசேஷ நாட்களில், எனக்குப் பிடித்த இன்னொன்று, தெருக்களில் தற்காலிகமாகப் போடப்படும் நடைமேடைக் கடைகள். சேர்ந்து வைத்த உண்டியல் பணத்தில் எதையாவது வாங்குவது மிகப் பிடித்தது.
அம்மன் கோவில்:
எங்கள் வீட்டு எதிரிலேயே சிறிய அம்மன் கோவில் இருந்தது. சிறியது என்றால், அம்மனுக்கு மட்டும் மூன்று பக்கம் சுவர், மேலே கூரை. அபார்ட்மெண்ட்கள் வெளியில் பிள்ளையார் வைத்திருப்பார்கள், அதுபோல. கோவில் தான் மிகச் சிறியது, ஆனால் பூஜை, பக்தர்கள், விசேஷங்கள் என்று வெகு சிறப்பாக அனைத்தும் நடக்கும்.
ஆடி மாதத்தில் காலையிலும் மாலையிலும் மைக் செட்டில் அலறும் பாட்டை, படிப்பைத் தொந்தரவு செய்யுதே என்று புலம்பியது ஒரு புறம். ஆனால் அனைத்துப் பாடலும் பிடித்து மனப்பாடம் ஆனது மறுபுறம்.
கற்பூர ஆரத்தி செய்யும்போது தவறாமல் யாராவது ஒருவருக்கு 'சாமி' வரும். அப்போதும் பயப்படாமல் வேறு யாராவது குறி கேட்பார்கள். கோவில் உற்சவம் என்றால் காப்பு கட்டி பத்து நாட்கள் அந்தத் தெருவில் யாரும் இரவில் வெளியில் தங்கக் கூடாது என்று சொல்வார்கள். அந்தச் செய்தியே எனக்குத் திகிலாக இருக்கும்.
அலகு குத்துவது, தீ மிதிப்பதுன்னு எல்லாமும் உண்டு. ஒரே ஒரு முறைக் கட்டைகளை அடுக்குவது முதல், தீ நன்கு கனன்று எரிந்து அடங்கி, கரிபோல மாறியது வரைப் பார்த்தது நினைவில் இருக்கு. அதுக்கு பிறகு தீ மிதிப்பையும் பார்த்தேன்.
ஞாயிறு மதியத்தில் துர்கைக்கு விளக்கேற்ற அம்மாவுடன் செல்வேன். அங்கு கூட்டமாகப் பெண்கள் பாடும் அனைத்து ராகுகால பாட்டும் எனக்கு மிகப்பிடித்தவை.
மடங்கள்:
ராகவேந்திர மடம், உத்திராதி, வ்யாசராஜர் என்று பல மடங்கள் உண்டு திருவல்லிக்கேணியில். இவை எல்லாமும் வழக்கமாகச் செல்லும் கோவில்கள்தாம்.
இப்படி நான் வளர்ந்த சூழலே கோவில் குளங்களை ஒன்றியே இருந்தது.
கடற்கரை:
திருவல்லிகேணியிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக் கோவில்களை போல, கடற்கரையும் வாழ்வின் ஓர் அங்கம். எனக்கும் மெரினா பீச் அப்படிதான்.
பல நாட்கள் விடியற்காலையில் அண்ணனுடன் ஜாக்கிங் போனது, அருகம்புல் ஜூஸ் குடித்துப் பிடிக்கலை என்று சொன்னது, கடற்கரை ஊத்து தண்ணியைக் குடத்தில் பிடித்து சைக்கிளில் கட்டி வீட்டுக்குக் கொண்டு வரும் அண்ணனுடன் கூட இருந்தது, ஓரிரண்டு கிரகிணத்தன்று கடற்கரையில் குளித்தது, குடியரசு தின அணிவகுப்பு பார்க்கக் குடும்பத்தோடு விடி காலையிலேயே சென்று, வெயில் படாத பகுதியில் இடத்தைப் பிடித்தது, நடனக் குழுக்கள் வரும்போது, 'நம்ம கிட்ட டான்ஸ் ஆடமாட்டாங்களா' என்று ஆசையாய் எதிர்ப் பார்த்தது, கல்லூரி நாட்களில் தோழிகளுடன் மாலையில் கையில் செருப்பைப் பற்றிக் கொண்டு வெதுவெதுப்பான மணலில் நடந்தது, எனக் கடற்கரையை ஒட்டிய நினைவுகள் அனைத்தும் இனிமையானவை.
பைகிராஃப்ட்ஸ் ரோடு:
இந்தத் தெரு பெயரைச் சரியாக உச்சரிக்கக் கூட தெரியாமல், bycross, paicross இன்னும் என்னென்னவோ உளறிய சிறிய வயது நாட்கள் அவை. வளையல் கடை, ரிப்பன் கடை, பலப்பல நடைப்பாதைக் கடைகள் என்று இல்லாத பொருட்களே இருக்காது இந்தத் தெருவில். பழைய புத்தகக் கடைகள் பிரசித்தம் அந்நாட்களில். பாதி விலைக்கு நல்ல நல்ல புத்தகங்கள் கிடைக்கும். பள்ளி, கல்லூரி புத்தகங்கள், போட்டி தேர்வுகளின் புத்தகங்கள், ஐந்தாண்டு கேள்வி விடைப் புத்தகங்கள் என்று எல்லாமும் கிடைக்கும். "விஜய் ஐஸ்"சில் தான் முதன்முதலில் softy ice விற்றார்கள்ன்னு நினைக்குறேன். அந்தச் சுவை இப்போது இல்லைன்னு தோணியது, சில வருடங்கள் முன்பு சென்றபோது சுவைத்தபோது.
ஹோட்டல், சினிமா:
ரத்னா கபே மிகவும் பிரசித்தம் என்றாலும், ரெஸ்டாரண்ட்’களில் சாப்பிட அனுமதி இல்லாத / சந்தர்ப்பம் வாய்க்காத பள்ளி, கல்லூரி நாட்கள் என்னுடையவை. அதனால் இங்கு அக்காலத்தில் சாப்பிட்ட நினைவு இல்லை. ஸ்டார், பாரகன், தேவி, சாந்தி இந்த நான்கு தியேட்டரிலும் நடந்தே போய் சினிமா பார்த்த நினைவு சிறிது இருக்கிறது.
பேருந்துகள்:
கல்லூரி, வேலை என்று வந்தவுடன் தான் பேருந்து பயணம் தொடங்கியது எனக்கு. பைகிராஃப்ட்ஸ் ரோடு, கண்ணகி சிலை, ஐஸ் ஹவுஸ் இந்த மூன்று பேருந்து நிருத்தத்திலிருந்தும் எங்கு வேண்டுமானாலும் செல்லப் பேருந்துகள் உண்டு. பைக், ஆட்டோ வெல்லாம் கட்டுப்படி ஆகாத அந்நாட்களில், எங்கும் செல்லப் பேருந்துகள்தான்.
நினைவிடங்கள்:
விவேகானந்தர் இல்லம், பாரதியார் இல்லம் இதெல்லாம் இப்போது புதுப்பித்து வைத்திருக்கிறார்கள். இடிந்(த்)த நினைவிடங்களில் கண்ணகி சிலையும், சீரணி அரங்கமும் இன்னமும் நினைவில் உள்ளது. கலைவாணர் அரங்கம் இப்போது பிரம்மாண்டமாய் இருக்கிறது போலும். நான் பார்க்கவில்லை. இங்கு சென்று எஸ் வீ சேகர் நாடகம், உலகப் புகழ்ப் பெற்ற மேஜிக் ஷோ (பெயர் நினைவில்லை) பார்த்த நினைவுகள். திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சபா ஒரு இண்டு-இடுக்கில் இருக்கும். அங்கு சென்று கச்சேரிகள், crazy மோகன் நாடகங்கள் பார்த்த நினைவுகள் இருக்கிறது.
மிஸ் யூ சென்னை!
இவை எல்லாவற்றையும் இப்போது மிஸ் செய்கிறேன். சென்னையின் பரபரப்பிற்குப் பழகியிருந்த நான், கோவையின் மந்தமான வாழ்க்கைக்குப் பழக "சில வருடங்கள்" பிடித்தது. "நீயும் குக்'கு, உன் ஊரும் குக்'கா" என்பது போல, அமைதியான சுபாவமுடைய நான், அமைதியான கோவையில் செட்டில் ஆனேன்.
ஆனால் விடுமுறைகளைச் சென்னை செல்லாமல் மிஸ் செய்ததில்லை. சொந்த ஊருக்கே விருந்தாளி மாதிரி (ஒரு சோக வயலின் இசை மனசுல ஓடவிடுங்க) போய் விட்டு வருவதெல்லாம் கடினமான விஷயம்தான் என்றாலும், விடுமுறை என்றாலே சென்னை எனும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ