மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கி பின்னர் கலைந்து விட்டது போல, நடிகர் விஜய் தொடங்கிய கட்சியும் நீடிக்காது. ஆனால், எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவதை யாராலும் தடுக்க முடியாது” என்று உறுதியளித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் திருமங்கலம் தொகுதிக்கு வருவதை முன்னிட்டு, ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய எஸ்.பி.வேலுமணி, “எழுச்சி பயணத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு இடத்திலும் மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. மதுரை மண்ணில்தான் புரட்சித் தலைவி ஜெயலலிதா கண்டனப் போராட்டங்களைத் தொடங்கி வெற்றியை நோக்கிச் சென்றார். அதேபோல் எடப்பாடியும் மதுரையில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு விரைவில் ஆட்சிக்குச் செல்வார்” என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:“திருமங்கலம் தொகுதியில் குறைந்தது 40,000 வாக்காளர்கள் பங்கேற்க வேண்டும். எடப்பாடி திமுக செய்யாத திட்டங்களை விளக்குகிறார்; மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்யவிருக்கும் திட்டங்களையும் அறிவிக்கிறார். இந்த செய்தி ஒன்றரை லட்சம் மக்களுக்கு சென்றடையும். மக்கள் தயாராக இருக்கிறார்கள்; நிர்வாகிகள் ஒருங்கிணைக்க வேண்டும்.
நடிகர் விஜய் மதுரையில் பேசியுள்ளாராம். அதிமுக தலைவர் யார் என்று அவர் கேட்டிருக்கிறார். அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய்க்கு தெரியாதது போல. ‘சிங்கம் ஒரு நாள் வெளியில் வரும்’ என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல், சிரஞ்சீவி ஆந்திராவில் பிரஜா ராஜியம் கட்சி தொடங்கி பெரும் கூட்டங்களை நடத்தினார். ஆனால் கட்சி கலைந்துவிட்டது. எடப்பாடியைப் பற்றி பேச விஜய்க்கோ அல்லது வேறொருவருக்கோ உரிமை கிடையாது.
மீடியாக்கள் திமுக – விஜய் போட்டி என்று செய்திகள் வெளியிடுகின்றன. ஆனால் உண்மையில் அதிமுக ஒரு முறை தோற்றாலும் மீண்டும் எழுந்து மாபெரும் வெற்றி பெறும் கட்சி. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி குறைந்தது 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். அப்போதும் எடப்பாடிதான் முதலமைச்சர். இதை விஜய் மட்டுமல்ல யாராலும் தடுக்க முடியாது.
எடப்பாடி பழனிசாமி, ஒரு கிளைக் கழக செயலாளராக இருந்து தன் உழைப்பால் பொதுச் செயலாளராக உயர்ந்தவர். 1989-ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என படிப்படியாக வளர்ந்தவர். இந்த வரலாறு அனைவருக்கும் தெரியும், ஆனால் விஜய்க்கு தெரியாதது போல உள்ளது” என வேலுமணி தெரிவித்தார்.