குஜராத் மாநிலத்தில் ரூ.5,477 கோடி மதிப்பிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 2 நாள் பயணமாக வந்திருந்தார்.
நேற்று மாலை, அகமதாபாத்தின் நரோடா – நிகோல் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மோடி பிரமாண்டமான ரோடு ஷோ ஒன்றை நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில், மோடி வாகனத்தில் நின்றபடி கைகளை அசைத்து ஆதரவாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இன்று (திங்கட்கிழமை) அகமதாபாத் அருகே உள்ள ஹன்சல்பூர் தொழிற்சாலையில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மாருதி சுசுகி நிறுவனத்தின் c-Vitara பேட்டரி மின்சார கார் உற்பத்தி யூனிட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த c-Vitara EV SUV அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. அதோடு, ஜப்பான் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்ற பெரும் இலக்கை மாருதி நிறுவனம் முன்வைத்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்திக்கு பெரிய பங்களிப்பைச் செய்கிறது. உலக சந்தைகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார கார்கள் ஏற்றுமதி செய்யப்படுவது, நாட்டின் Make in India திட்டத்துக்கு வலுவூட்டும் வகையில் உள்ளது.
மேலும், குஜராத்தில் மோடி தொடங்கி வைத்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், அந்த மாநிலத்தின் தொழில், போக்குவரத்து மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று நம்பப்படுகிறது.