இன்று தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்களின் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் அனிருத். அடுத்தடுத்து விஜய், ரஜினிகாந்த், அஜித், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களை மட்டுமே செய்து வருகிறார். அதேபோல படத்துக்கு படம் அவருடைய இசை மேம்பட்டு கொண்டே செல்கிறது.
இன்றைய இளசுகளின் இதயங்களை இவரின் பாடல்களால் வென்று வருகிறார். எங்கு திரும்பினாலும் இவருடைய பாடல்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது. பாலிவுட்டின் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ’ஜவான்’ திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என ஒரு ரவுண்டு வருகிறார் அனிருத்.
அனிருத் இசையில் கடைசியாக கூலி திரைப்படம் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இவரின் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்தின் படங்களை அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்து வரப்போகிற ஜெயிலர்-2 படத்துக்கும் இவரே இசையமைப்பாளர். அது மட்டும் இல்லாமல் ஆதிக் ரவிச்சந்திரன்,அஜித்குமார் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.
பொங்களுக்கு வெளியாக உள்ள விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசையமைப்பாளரும் இவரே. இப்படி அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் விரும்பத்தக்க இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் அனிருத் இவ்வளவு பெரிய உச்சம் அடைவதற்கான காரணத்தை ரஜினியின் மூத்த மகளும் அனிருத் உறவினருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, ”ரொம்ப சந்தோசமா இருக்கு அனிருத் சினிமாவுல இவ்வளவு தூரம் வந்ததுக்கு, ஆனால் இவ்வளவு தூரம் உயர்ந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் என் உறவினர் இருந்தாலும்”,
” அவருக்கு முழுக்க முழுக்க டேலண்ட் இருக்கு. ”3” படத்திற்கு இசை அனிருத் பண்ணலாம் என்று சொன்னது தனுஷ் தான். அனிருத்தின் வீட்டில் அவர் வெளிநாட்டிற்கு சென்று B.com படிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் தனுஷ் தான் அதெல்லாம் வேண்டாம். அனிருத்துக்கு இசையில் நிறைய திறமை இருக்கு என்று சொல்லி அவருக்கு கீபோர்ட் வாங்கி கொடுத்தது முதல் பட வாய்ப்பு கொடுத்தது வரை எல்லாமே தனுஷ் தான்”.
“இன்று நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருக்கிறார் என்றால் அவருடைய கடின உழைப்பு தான் காரணம். குறிப்பிட்ட காலத்திற்குள் அனிருத் சிகரம் தொட்டது மகிழ்ச்சிதான்”. இவ்வாறு அனிருத் அசுர வளர்ச்சி காரம் தனுஷ் தான் என்று கூறியிருக்கிறார் என்னதான் தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தாலும் இன்றும் தனுஷை விட்டுக் கொடுக்காமல் பேசியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தனுஷ் தற்போது அனிருத்துடனும் பேசுவதில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாக படம் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.