மத்திய பிரதேசம், பாண்டுர்ணா மாவட்டம்:மத்திய பிரதேசத்தில் பாரம்பரியமாக நடைபெறும் கல்வீச்சு திருவிழா கடுமையான மோதலுக்கு தள்ளி, சனிக்கிழமையன்று 934 பேர் காயமடைந்தனர்.
‘கோட்மார் திருவிழா’ என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி, பாண்டுர்ணா மற்றும் சவர்கான் கிராம மக்களுக்கிடையில் வருடந்தோறும் ஜாம் ஆற்றின் கரையில் நடைபெறுகிறது. 400 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டதாகக் கூறப்படும் இந்த விழாவில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சவர்கான் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் காவ்லே குடும்பத்தினர் அருகிலுள்ள காட்டிலிருந்து ஒரு ‘பலாஸ்’ மரம் வெட்டி கொண்டு வந்து, ஜாம் ஆற்றின் நடுவே நட்டனர். அதன் உச்சியில் கொடி ஏற்றி, சண்டி மாதா கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டதும் விழா தொடங்கியது.
பாண்டுர்ணா கிராம மக்கள் அந்தக் கொடியை எடுக்க ஆற்றில் இறங்கினர். இதற்கு எதிராக சவர்கான் கிராமத்தினர் கற்களை வீசத் தொடங்கினர். பதிலுக்கு பாண்டுர்ணா கிராமத்தினரும் கற்களை வீசி தாக்கினர். இருபுறமும் பல மணி நேரம் நடந்த கல்வீச்சில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த நிகழ்வை முன்னிட்டு, 12 மருத்துவ முகாம்கள் மற்றும் 58 மருத்துவர்கள், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர். காயமடைந்தவர்கள் உடனுக்குடன் சிகிச்சை பெற்றனர்.
சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த 600 போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும், கல்வீச்சை முற்றிலும் தடுக்க முடியவில்லை. மக்கள் “விழாவின் பாரம்பரியம்” என்ற பெயரில் கற்களை வீசத் தொடர்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
1955 முதல் 2023 வரையிலான காலத்தில் இந்த கல்வீச்சுத் திருவிழாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டின் நிகழ்வில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. அதனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பாண்டுர்ணா காவல் நிலையம் தெரிவித்துள்ளது.