அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகன் எங்கிருந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரகுடிபட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுதல் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். அப்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார்.
அப்போது, டி.ஆர்.பி.ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அண்ணாமலையிடமிருந்து பதக்கங்களை வாங்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அண்ணாமலை கழுத்தில் பதக்கத்தை அணிவிக்கப்போக, அதனை கையில் வாங்கிக்கொண்ட சூரிய ராஜபாலு, புகைப்படத்திற்கு மட்டும் நின்றுகொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. டி.ஆர்.பி.ராஜாவின் மகன் செயலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “யார் கையால் பதக்கம் வாங்க வேண்டும்; யார் கையால் வாங்க வேண்டாம் என்பது அவரவர் விருப்பம், என் கையால் பதக்கம் வாங்கவில்லை, வாங்க மறுத்துவிட்டார் என்பது முக்கியமில்லை. டி.ஆர்.பி ராஜாவி மகன் எங்கிருந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த துறையில் சாதனை செய்து, பெரிய மனிதராக வளர வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.