சிறுமியை கை, கால்களை கட்டிபோட்டு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சென்னை, துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான முனியப்பன் கடந்த 08.04.2015 அன்று 9 வயது சிறுமியிடம் கை, கால்களை கட்டிக்கொண்டு விளையாடலாம் என கூறி அந்த சிறுமியின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி நசிமா பானு நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் முனியப்பனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல திருப்பூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையை சேர்ந்த பனியன் தொழிலாளி, பெண் ஒருவரை 2-வதாக திருமணம் செய்து, அவருடன் வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில், அந்த பெண்ணின் பேத்தியான 9 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் கழிவறைக்கு சென்ற போது, அந்த பகுதியை சேர்ந்த ஆண்டனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி பாட்டியிடம் கூறினாள். பின்னர் இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆண்டனியை கைது செய்தனர்.